ADVERTISEMENT

இரவு நேர ஊரடங்கு... உழைக்கும் வர்க்கத்தை தாக்கும் வறுமை வைரஸ்!

08:05 PM Apr 21, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த வருடத்தில் ஏற்பட்டதுபோல் மீண்டும் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் தொடங்கிவிட்டது என விசைத்தறி தொழிலாளர்களிடமிருந்து பரிதாபக் குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டது. கரோனா வைரஸ் தொற்று பரவுவதைவிட தொழில் முடக்கம், அதனால் வருவாய் இழப்பு, அன்றாட உணவு தேவைக்கே பரிதவிப்பு என்கிற வறுமை வைரஸ்தான் எங்கள் வாழ்வில் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது எனக் கண்ணீர் விட தொடங்கி விட்டனர்.

தொழில் முடக்கத்திற்கு உதாரணமாக, ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் எனப் பல பகுதிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 30 லட்சம் மீட்டர் ரயான் துணி இங்கு உற்பத்தி செய்யப்பட்டு மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உட்பட பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா முழுக்க கரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருவதால் வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிப்படைந்துள்ளது என விசைத்தறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சென்ற 15 நாட்களாக வெளிமாநிலங்களுக்கு உற்பத்தியான ஜவுளிகள் அனுப்ப முடியாமல் ரூபாய் 200 கோடி மதிப்பிலான துணிகள் இங்கேயே தேக்கமடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இப்போது தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு போடப்பட்டு நேற்று இரவு முதல் இந்த ஊரடங்கு அமலுக்கும் வந்துவிட்டது.

ஈரோடு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிஃப்டுகள் அடிப்படையில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிஃப்டும், அடுத்து இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை ஒரு ஷிஃப்டும் என்ற அடிப்படையில் தான் விசைத்தறிகள் இயங்குகிறது. இதன் மூலம் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தற்போது இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள காரணத்தால் ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்து, அதன்படி 20 ந் தேதி இரவு முதல் காலை நேர ஷிஃப்டு மட்டுமே விசைத்தறிகள் இயக்கப்பட்டன. இரவு நேர ஷிஃப்ட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு 30 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியாகும் இடத்தில் 15 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி ஆகும். இதன் மூலம் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து விட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT