
கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளும், அதேபோல் சென்னையில் பல இடங்களில் சென்னை காவல்துறையினரும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் ஐ.எஸ் அமைப்புடன் சிலருக்கு தொடர்பு உள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில் இரண்டு பேர் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி இனாம்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீத், ஷர்புதீன் என்ற இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பின் முகநூல் பக்கத்தை லைக் செய்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று அவர்களது வீடுகளில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை நடவடிக்கைக்கு பாதுகாப்பளித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியோடு சுமார் மூன்று மணி நேரம் இந்த சோதனையானது நடைபெற்றது. இச்சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.