
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் துரிதமாக செயல்பட்ட தமிழக காவல்துறையை தேசிய புலனாய்வு முகமை பாராட்டி உள்ளதாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''புதன்கிழமை (26/10/2022) அன்று தேசிய புலனாய்வு முகமை மற்றும் மாநில காவல்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத்துறை இணைந்து முழுமையாக சந்தேகப்படக்கூடிய நபர்களிடத்தில் இணைந்து விசாரணை செய்திருக்கிறார்கள். பொதுவாக ஒரு மாநிலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்தால் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அந்த மாநில காவல் துறையைச் சார்ந்ததாக இருக்கும். இந்த வழக்கில் விசாரணை அடிப்படையில் இதில் பயங்கரவாத தொடர்பு இருக்கிறது அல்லது பல மாநிலங்களுக்கு இடையே இருக்கக்கூடிய ஒரு தீவிரவாத செயல் இதில் இருக்கிறது என்பது போன்ற நிலைகள் கண்டறியப்பட்டால் தேசிய புலனாய்வு முகமை நேரடியாக இந்த வழக்கை எடுத்து விசாரிக்கக் கூடிய அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது.
இருந்தாலும் அவர்கள் முழுமையாக இந்த விசாரணையில் நம்மோடு இணைந்து இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் தான் தமிழ்நாடு அரசு கிடைத்த தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டி இந்த வழக்கை அவர்களே (என்.ஐ.ஏ) விசாரிக்கலாம் என்று முடிவு எடுத்து வழக்கை என்.ஐ.ஏவிற்கு மாற்றி கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் நிகழ்ந்தது முதல் தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை எடுத்துக் கொள்வது வரை அனைத்து விவரங்களும் தமிழக காவல்துறையால் நமது மத்திய உளவுத்துறைக்கும், அதேபோல் தேசிய புலனாய்வு முகமைக்கும் தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் மற்றொன்றையும் நான் தெரிவிக்க வேண்டும் இதில் உயிரிழந்த ஜமேசா முபீன் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டிருக்கிறார். அப்பொழுது விசாரணை வளையத்தில் இருந்தவர் அதற்குப் பிறகு ஏன் விடுவிக்கப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அது அப்பொழுது விசாரணையில் இருந்த என்.ஐ.ஏ அதிகாரிக்குத்தான் தெரியும் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்'' என்றார்.