ADVERTISEMENT

நெய்வேலி வன்முறை; பாமகவினர் 28 பேருக்கு நீதிமன்ற காவல்

08:35 AM Jul 29, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த 26, 27 ஆம் தேதி என இரு நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று பாமக சார்பில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி, என்.எல்.சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றபோது அவரைக் கைது செய்த காவல்துறையினர் பேருந்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கிருந்த பாமகவினர் அன்புமணி இருந்த பேருந்தை முற்றுகையிட்டனர். மேலும் தடுப்புகளை மீறி போலீசார் மீது பாமகவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தக் கல்வீச்சு தாக்குதலில் காவல்துறையினருக்குப் படுகாயம் ஏற்பட்டதால் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தின்போது பாமகவினர் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 8 பேரும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 6 செய்தியாளர்களும் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கடலூரில் ஒரு தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்ட நிலையில், அன்புமணி கைதைக் கண்டித்து பல இடங்களில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று மாலை அன்புமணி ராமதாஸ் உட்படக் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். கலவரம் நிகழ்ந்த இடத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் நேற்று வன்முறையில் ஈடுபட்ட பாமகவைச் சேர்ந்த 28 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 28 பேரும் நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 28 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT