ADVERTISEMENT

தாயின் இறுதிச் சடங்கில் வந்த செய்தி; மறுநாளே நேரடியாக சென்று உதவிய அமைச்சர்! நெகிழ்ந்த மக்கள்!!

12:34 PM May 25, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'அன்றாட சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கிறோம்’ என நரிக்குறவர் இன மக்கள் தங்களது நிலைமை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட, தன்னுடைய தாயின் இறுதிச் சடங்கு முடித்த கையோடு பாதிக்கப்பட்ட மக்களின் இடத்திற்கே சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி அசத்தியுள்ளார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான பெரியகருப்பன்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து நான்குமுறை வெற்றிபெற்று, தற்போது தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பணியாற்றிவருபவர் பெரியகருப்பன். இவரது தாயாரான கருப்பாயி அம்மாள், வயது முதிர்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று (23.05.2021) இயற்கை எய்தினார். சொந்த ஊரான அரளிக்கோட்டையில் அன்று மாலையே இறுதிச் சடங்கு நடைப்பெற்று முடிந்தது. இந்நிலையில், திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்திரா நகரைச் சேர்ந்த நரிக்குறவ இனமக்கள், ‘அன்றன்று ஊசி, பாசி கோர்த்து விற்றால் எங்களது வயிற்றைக் கழுவ முடியும். இந்தக் கரோனா காலத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை. வேறு எவ்வித வேலையும் இல்லை, எங்களுடைய வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசு எங்களுக்கு உதவ வேண்டுமென’ சமூக வலைதளங்களில் பேசியுள்ளனர்.

இது வைரலாகி, மாவட்டம் முழுமைக்கும், குறிப்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் சென்றடைந்தது. அமைச்சர் தாயின் இறுதிச் சடங்கு நடைப்பெற்ற அதே வேளையில் அமைச்சரின் காதிற்கும் இந்த விஷயம் செல்ல, “எனக்கு குடும்பமென்பது மக்கள்தான். ஆகவே நாளைக்கே அங்கு சென்று நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்திரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருக்க திங்களன்று நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் இந்திரா நகருக்கே சென்றார். அங்குள்ள 117 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப்பருப்பு, மிளகாய்ப்பொடி ¼ கிலோ, மஞ்சள்பொடி 100 கிராம், ஆவின் ½ லிட்டர் பால் ஆகியவை கொண்ட தொகுப்புகளை வழங்கினார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்.

தொடர்ந்து பேசுகையில், “தற்போது கரோனா நோய்த்தொற்று காலத்தைக் கருத்தில்கொண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக ரூ. 2,000 வழங்கப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதி மக்களின் பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. இப்படி எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், அது எவ்வாறு அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணி திட்டங்களை செயல்படுத்தக்கூடிய தலைவர்” என தெரிவித்தார். தாயின் இறுதிச்சடங்கு முடித்த கையோடு முடி இல்லாமல் மொட்டைத்தலையுடன் மக்களுக்கு சேவை செய்யவந்த அமைச்சர் பெரியகருப்பனை எண்ணி நெகிழ்கின்றனர் திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிவாசிகள்.

படங்கள்: விவேக்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT