
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தங்கை காதல் திருமணம் செய்து கொண்டதை எதிர்த்த நிலையில் பெண்ணின் சகோதரர்கள், தங்கையையும் அவரது கணவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் வாழ்ந்துவரும் சக்திவேல், ரஞ்சித் என்பவர்களின் தங்கை சரண்யா. சென்னையில் நர்ஸாக வேலை பார்த்து வந்த சரண்யா திருவண்ணாமலையை சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு சகோதரர்கள் சக்திவேல், ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட சரண்யா-மோகன் தம்பதியினர் சோழபுரம் வந்துள்ளனர். சரண்யாவின் குடும்பத்தினர் சமாதானமாக போய்விடலாம் என பேசி இருவரையும் விருந்துக்கு அழைத்ததன் பேரில் அவர்கள் சோழபுரம் வந்ததாகக் கூறப்படுகிறது. சரண்யாவின் குடும்பத்தினர் பேச்சை கேட்டு விருந்துக்கு வந்த சரண்யா மற்றும் மோகன் ஆகியோர் வீட்டில் அமர்ந்திருக்க, வீட்டுக்கு வந்த சகோதரர்கள் சக்திவேல் மற்றும் ரஞ்சித் இருவரையும் வீட்டிற்கு வெளியே வாசலுக்கு வரச்சொல்லி அழைத்துள்ளனர். அப்பொழுது வெளியே வந்த புதுமண தம்பதிகளை சக்திவேலும், ரஞ்சித்தும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே சரண்யாவும் மோகனும் துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய நிலையில், கொலையில் ஈடுபட்ட சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் சகோதரர் சக்திவேல், உறவினர் ஒருவருக்கு சரண்யாவை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரத்தில் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் புதுமண தம்பதிகளின் பெட்டி படுக்கைகள் வீதியில் கிடக்க இருவரும் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)