/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/inve ni_3.jpg)
உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று மாலை முதலே களைகட்டி வந்தது. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது.
அதே சமயம் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாகச் சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்கத்தயாராக இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியை எட்டியதிலிருந்து புத்தாண்டை நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று சென்னை மாநகரக் காவல் சார்பில் புத்தாண்டு தினத்தையொட்டி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதன்படி, ‘புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்கக் கூடாது. அதையும் மீறி, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மெரினா உள்பட முக்கிய கடற்கரையில் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளதால், புத்தாண்டையொட்டி கடலில் மக்கள் இறங்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை சாலையில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது’ என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், மெரினா கடற்கரையில் பள்ளி மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சம்ப்ரித் (16). இவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக, சம்ப்ரித் தனது நண்பர்கள் 4 பேருடன் இன்று (01-01-24) மெரினா கடற்கரையில் குளித்துள்ளார்.
இதையடுத்துஅங்கு வந்த போலீஸ், கடலில் குளித்த சம்ப்ரித் உள்ளிட்ட 5 மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். ஆனால், அதையும் மீறி சம்ப்ரித் மற்றும் அவரது நண்பர்கள் கடலில் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வந்த ராட்சத அலையில்சிக்கி சம்ப்ரித் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், கடல் அலையில் சிக்கிய 2 மாணவர்களைப்பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)