Skip to main content

ஆங்கிலப் புத்தாண்டு... கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுடன் அன்னதானம்

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

 New Year... special worship in temples!

 

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை இளைஞர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து வரவேற்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரமாண்ட சிவன் சிலையும் தலைமைப் புலவர் நக்கீரருக்கு சிலையும் கொண்ட கீரமங்கலம் ஒப்பிலாமணியம்பிகை உடனுறை மெய்நின்றநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகளுடன் பழனி பாதயாத்திரை பக்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் அன்னதானம் நடத்தப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் பிரமாண்ட சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தைச் சுற்றி வந்தனர்.

 

 New Year... special worship in temples!

 

மேலும், குழந்தைகள் சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர். அதே போல, செரியலூர் கிராமத்தில் உள்ள செரியலூர் - கரம்பக்காடு தீர்த்தவிநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து இளைஞர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகளும் நடந்தன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புத்தாண்டு கொண்டாட்டம்; 267 வழக்குகள் பதிவு

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
267 cases registered in night vehicle inspection ahead of New Year

2024 புத்தாண்டு கழிக்கும் வகையில் வேலூர் கோட்டையில் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டைக் கொண்டாடினர். நேற்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வந்து சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளும் தொடர்ந்து வந்ததால், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அந்த வகையில் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் வேலூர் கோட்டை களைகட்டியது.

அதே சமயம், புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டன. அப்போது, வேலூர் சரகத்தில் 112 வழக்குகளும், காட்பாடி சரகத்தில் 138 வழக்குகளும் மற்றும் குடியாத்தம் சரகத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மாவட்டம் முழுவதும் 267 வழக்குகள் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 104 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

புத்தாண்டு ‘2024’; தலைவர்கள் வாழ்த்து!

Published on 31/12/2023 | Edited on 01/01/2024
New Year 2024 Greetings leaders

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று மாலை முதல் களைகட்டி வருகின்றன. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரில் மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் இந்தியாவிலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் ஏராளமானவர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தலைவர்கள் பலரும் 2024 ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. "எல்லார்க்கும் எல்லாம்" என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “2024 புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.‘புத்தாண்டு 2024’ நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொடுக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும். அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில் மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்திரராஜன், “நம் பாரத தேச மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு,புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும். இயற்கை சீற்றங்களால் நாம் சந்தித்த இடர்களைக் கடந்து 2024- புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராவோம். அன்பையும்,வாழ்த்துக்களையும் அனைவரோடும் பரிமாறிக் கொள்வோம். ஒற்றுமை உணர்வோடும் சமத்துவச் சிந்தனையோடும் பாரத தேசம் உலக அரங்கில் பீடுநடை போடும் வகையில் கடமையாற்ற உறுதி ஏற்போம். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “ எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.புதிய ஆண்டில் போர்கள் ஓயட்டும்; அமைதி நிலவட்டும்; சகோதரத்துவம் பரவட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.