Skip to main content

'கேக்' வாங்க பணம்தராத இளைஞருக்கு கத்தி குத்து!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

new year party issue one youth passes away


விழுப்புர நகர்ப்பகுதியில் உள்ளது அருந்ததியர் தெரு. இந்தத் தெருவைச் சேர்ந்தவர் 22 வயது கௌதம். இவரும் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த 23 வயது தமிழ்மணி ஆகிய இருவரும் நண்பர்கள். இதில் கௌதம் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். தமிழ்மணி தள்ளுவண்டியில் தக்காளிப் பழ வியாபாரம் செய்துவருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்துக் கொள்வது உண்டு. 


கடந்த 31ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாடுவது சம்பந்தமாக இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது புத்தாண்டு இரவை கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று முடிவுசெய்தனர். இதற்காக தமிழ்மணி, கௌதமிடம் 200 ரூபாய் பணம் கேட்டுள்ளார். கவுதம் பணம் தர மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தகராறு செய்துகொண்டிருந்ததைப் பார்த்த சக நண்பர்கள், அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.


இருவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். ஆனால், கௌதம் மீது ஆத்திரம் அடங்காத தமிழ்மணி, கடந்த 2ஆம் தேதி இரவு 9 மணியளவில், கௌதம் வீட்டு வழியாகச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் வெளியே நின்றிருந்த கவுதமிடம் தமிழ்மணி, கேக் வாங்க பணம் தர மறுத்ததை மனதில் வைத்துக் கொண்டு ஆபாசமாகத் திட்டி அவரிடம் மீண்டும் தகராறு செய்ததோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கௌதமை சரமாரியாகக் குத்தியுள்ளார். 

 

இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார் கவுதம். சத்தம் கேட்டு கௌதம் வீட்டிலிருந்து உறவினர்கள் வெளியேவந்து பார்த்தபோது தமிழ்மணி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனே ரத்த வெள்ளத்தில் கிடந்த கௌதமை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்குக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தமிழ்மணியை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்