/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_85.jpg)
சேலத்தில், போதை மருந்து செலுத்திக் கொண்டதால் 18 வயது பள்ளி மாணவன் இறந்தாரா என்ற சந்தேகம் கிளம்பியதால், புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்யப்பட்டது.
சேலம் மணியனூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். வெள்ளிப்பட்டறைத் தொழிலாளி. இவருடைய மகன் கிரி (18). அண்மையில், பிளஸ்2 பொதுத்தேர்வு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். ஏப். 7ம் தேதி, லைன்மேடு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் சென்ற அவர், பின்னர் வீடு திரும்பும்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கிரி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சீலநாயக்கன்பட்டியில் உள்ள இடுகாட்டில் மகனின் சடலத்தை பெற்றோர் அடக்கம் செய்தனர். இந்நிலையில் கிரியின் தந்தை மாணிக்கம், தன் மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக திடீரென்று அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை உதவி ஆணையர் அசோகன், ஆய்வாளர் சந்திரகலா ஆகியோர் விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் கிரி மீது கஞ்சா, கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவனுடைய பெற்றோர் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதும், தாய் வீட்டில் கிரி வசித்து வந்ததும் தெரிய வந்தது. கடந்த ஓராண்டாக அவர் மஞ்சள் காமாலைக்கு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, போதை ஊசி போட்டுக் கொண்டதால்தான் கிரி இறந்தார் என்றும் சிலர் சந்தேகம் கிளப்பி உள்ளனர்.
இதையடுத்து மாணவனின் சடலத்தைத் தோண்டி எடுத்து, வட்டாட்சியர் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 9) உடற்கூராய்வு செய்யப்பட்டது. முக்கிய உடல் உறுப்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. முதல்கட்ட உடற்கூராய்வில் கிரியின் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. கூராய்வுக்குப் பிறகு மாணவனின் சடலம், தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், அதே இடத்திலேயே மீண்டும் சடலத்தைப் புதைத்தார். அறிவியல் பகுப்பாய்வுக்கூட அறிக்கை கிடைத்த பிறகே, மாணவனின் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)