New twist in actress Chitra  case Hemnath released on bail

Advertisment

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை சித்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.

கடந்த டிசம்பர் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், ‘தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவும், அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவும் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. எனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எந்தக் குற்றமும் செய்யாத எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’என கேட்டுக்கொண்டிருந்தார்.

Advertisment

இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ‘சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே தற்கொலை செய்துகொண்டார். சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரது தொலைபேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதுபோல, சித்ரா தூக்குப் போட்டு தற்கொலைதான் செய்துகொண்டுள்ளார் என நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி, “சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் ஹேம்நாத்துக்கு எதிராக குற்றம்சாட்டும் வகையிலான ஆதாரங்கள் இல்லை” எனத் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 60 நாட்கள் கடந்தும் ஹேம்நாத் தொடர்ந்து சிறையில் உள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கில் 60 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததைக் கருத்தில் கொண்டு ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.