New Tidal Park The Chief Minister opens today

தமிழ்நாட்டின் வடபகுதியிலுள்ள நகரங்களுக்குத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.11.2024) திறந்து வைக்கிறார்.

இக்கட்டடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படத் தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்ட மேலாண்மை வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள், 24 மணிநேரமும் பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டடமானது. 6 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டடம் வழிமுறைகளின் படியும் கட்டப்பட்டுள்ளது. பட்டாபிராமில் இப்புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியைச் சார்ந்த குறிப்பாகத் திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறவுள்ள பட்டாபிராம் டைடல் பூங்கா திறப்பு விழாவின்போது, பல்வேறு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அப்பூங்காவில் தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதற்கட்டமாக 18.18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.