
மக்களைப் பல்வேறு வகையில் மோசடி கும்பல் ஏமாற்றிவருகின்றன. அந்தக் கும்பல்களின் வலைகளில் அனைத்து தரப்பினரும் ஏமாற்றப்படுகிறார்கள். அந்த வகையில், தற்போது ஒரு பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் பெயரில், ‘உங்களுக்கு குலுக்கல் முறையில் லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது’ என்று கடிதம் மூலம் தொடா்புகொள்கிறார்கள். இதை யாரும் நம்பிவிடாதீர்கள் என்று குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது; “கடந்த சில நாட்களாக பிரபல ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியின் ஆண்டு விழாவை முன்னிட்டு குலுக்கலில் 6 பேருக்குப் பரிசு விழுந்துள்ளது; அதில் ஒரு நபர் நீங்கள் என்று தபால் மூலம் சிலருக்குக் கடிதம் அனுப்பபட்டுள்ளது. அதில் 12.50 லட்சம் ரூபாய் லக்கி பரிசாக விழுந்துள்ளது. எனவே அந்தப் பணம் உங்களுக்குக் கிடைக்க, இணைக்கப்பட்டிருக்கும் படிவத்தில் உங்கள் விபரங்கள், ஆதார் கார்டு, பான்கார்டு எண்கள் அனைத்தையும் நிரப்பி, குறிப்பிட்ட அந்த நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் காவல்துறை விசாரித்தபோது, அப்படி ஒரு குலுக்கல் தங்கள் நிறுவனத்தால் நடத்தப்படவில்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இது தங்களுடைய வங்கி விபரங்களைப் பெற்று பணத்தை மோசடி செய்ய முயற்சிக்கும் கும்பலின் செயல். எனவே பொதுமக்கள் இதுபோன்று வரும் கடிதங்கள், செல்ஃபோனில் வரும் மெசேஜ் போன்றவற்றை நம்பி தங்களின் விபரங்களான ஆதார் கார்டு மற்றும் பான்கார்டு போன்ற விபரங்களைக் கொடுக்க வேண்டாம். இதையும் மீறி நேரடியாக வந்து உங்களை தொடர்புகொண்டால், காவல் நிலையத்தில் கூற வேண்டும்” என்றார்.