/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/4_334.jpg)
13 மாவட்டங்களில் புதிய மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை புதிதாக திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஆறுகள், மலைகள், சமவெளிகள் என அனைத்து நிலைகளிலும் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாகவும், அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், புதிய மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவிலேயே அதிக அளவில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும் மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள மலைகள் தகர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான சரக்குந்துகளில் கனிம வளங்கள் கேரளத்திற்கு கொள்ளை அடித்துச் செல்லப்படுகின்றன. இதை பல முறை சுட்டிக்காட்டியும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த திராவிட மாடல் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இன்னொருபுறம் ஆறுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லையில்லாமல் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் பல இடங்களில் நடைபெறும் மணல் கொள்ளையால் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குள் கடல் நீர் ஊடுருவி, நிலத்தடி நீரை உப்புநீராக மாற்றியுள்ளது. இந்த இயற்கைச் சீரழிவைத் தடுப்பதற்கான தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசு, மணல் குவாரிகளைத் திறப்பதில் மட்டும் அதிதீவிரமான ஆர்வம் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும் . இந்த நோக்கத்தை எட்டும் வகையில் தான் தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்து நடத்தி வருகிறேன் . இது தவிர மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமான போராட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது.
ஆற்று மணல் கொள்ளையை நியாயப்படுத்தவும், மூடி மறைக்கவும் கட்டுமானப் பணிகள் என்ற போர்வையை தமிழக அரசு பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமானப் பணிகள் முக்கியம் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை. அரசு நினைத்தால் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை எளிதாக பூர்த்தி செய்யலாம். அதை விடுத்து மீண்டும், மீண்டும் மணல் குவாரிகளைத் திறந்து தமிழ்நாட்டை, குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றி விடக் கூடாது.
ஆறுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கிறோம் என்று கூறும் தகுதி திராவிட மாடல் அரசுக்கு கிடையாது. கடந்த 2023-ஆம் ஆண்டில் 25 இடங்களில் புதிய மணல் குவாரிகளை தமிழக அரசு திறந்தது.அவற்றிலிருந்து 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டியெடுப்பதற்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த அளவு மணலை வெட்டி எடுக்க பல ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே மணல் குவாரிகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த மணல் குவாரிகளில் 27.70 லட்சம் அலகுகள் மணல் அள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட 4 மடங்கு ஆகும். தமிழகத்தில் மணல் கொள்ளை எவ்வளவு வேகமாக நடைபெறுகிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூடுவதாலும், புதிய மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை கைவிடுவதாலும் வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது. மணல் தேவைக்கான மாற்று வழிகளை கடைபிடிப்பதன் மூலம் அரசுக்கும் ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானம் கிடைக்கும்; இயற்கை வளமும் பாதுகாக்கப்படும். ஆனால், மணல் குவாரிகளை திறப்பதன் மூலம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான மணல் வெட்டி எடுக்கப்படும் போதிலும், அரசுக்கு ஆண்டுக்கு கிடைப்பது ரூ.100 கோடிக்கும் குறைவான தொகை தான். இவ்வளவு குறைந்த வருவாய்க்கான மணல் குவாரிகளை திறப்பது தற்கொலைக்கு சமமானது.
எனவே, தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட புதிய மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்வது, செயற்கை மணல் உற்பத்தியை அதிகரித்து, விலையை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் கட்டுமானப் பணிகளுக்கான மணல் தேவையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களும் கனிம வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் நோக்கம். இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் தற்போது செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட தமிழக அரசு தவறினால் அதை கண்டித்தும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்குடனும் எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி ஏராளமான தொடர் போராட்டங்களை மாநிலம் முழுவதும் நடத்தும் என்று எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)