Skip to main content

பொதுத்தேர்வு கட்டுக்காப்பு மையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... தேர்வுத்துறை அறிவிப்பு!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

examination

 

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 12ம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்விற்கான் கணிதப் பாடத்திற்கான வினாத்தாள் அண்மையில் கசிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகி இருந்தன. அதற்காக ஒரு மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வினாத்தாள் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

அடுத்தடுத்து வினாத்தாள் கசிவதால், தமிழக அரசின் தேர்வு முறை மீதே மாணவர்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடும். தமிழ்நாட்டில் மருத்துவம் தவிர்த்த பிற படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடப்பதால், இதை அரசு எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வுகளுக்கான வினாத்தாள் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

 

இந்நிலையில் தேர்வுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தமிழ்நாடு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவேண்டும். சிசிடிவி கேமரா செயல்படுவதுடன் காவலர் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் 2 பூட்டுகள் கொண்டு பூட்டியிருக்க வேண்டும். பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிப்பாளராக நியமிக்கக் கூடாது. பொதுத்தேர்வு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களையே தேர்வுபணியில் ஈடுபடுத்த வேண்டும்' என பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவுகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

'

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.