New restriction on people coming to public places in Madurai!

தமிழ்நாட்டில் கரோனா பரவலின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதேவேளையில், உருமாற்றம் அடைந்த கரோனாவான ஒமிக்ரான், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. இருந்தும் பலர் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசியைக் கூட செலுத்திக்கொள்ளவில்லை. இதனால், மாவட்ட ஆட்சியர்கள் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “பொது இடங்களுக்கு வரும் மக்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டுமாவது செலுத்தியிருக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் அங்கு வரும் மக்கள் சோதிக்கப்படுவார்கள்.

தடுப்பூசி செலுத்தாவிட்டால், ஊசி செலுத்த ஒருவார காலம் அவகாசம் கொடுக்கப்படும். ஒரு வாரத்திற்குப் பின்பும் தடுப்பூசி செலுத்தாமல் வந்தால் அவர்களுக்கான அனுமதி மறுக்கப்படும். பொது இடங்களுக்கு வரும் நபர்கள் மொபைல் குறுஞ்செய்தியைக் காண்பிக்க வேண்டும். டாஸ்மாக், பார்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே மது வழங்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் நியாய விலைக்கடை, ஓட்டல், தங்கும் விடுதி, பார், ஷாப்பிங் மால், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், மார்க்கெட் உள்ளிட்ட 18 இடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மதுரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 71 சதவீதம் பேரும், 2ஆம் தவணையை 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக்கொண்டுள்ளனர். மதுரை மாவட்டம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் சற்று பின்தங்கியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மதுரை ஆட்சியர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.