Skip to main content

திருச்சி கொள்ளிடம் புதிய பாலத்தின் 7 தூண்களுக்கு சிக்கல்..!

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
S_O (1)


காவிரியிலிருந்து இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருந்தால் கடந்த ஜூலை மாதம் மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் கரை புரண்டு ஓடியது தண்ணீர்.

இதனால் திருச்சியில் உள்ள காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தினால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்த ஸ்ரீரங்கம் – டோல்கேட் பகுதியை இணைக்கும் 94 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்பு பாலத்தின் 3 தூண்கள் கடந்த மாதம் 18-ந்தேதி நள்ளிரவு இடிந்தது.

ஏற்கனவே வலுவிழந்த நிலையில் போக்குவரத்துக்கு தகுதியற்றது என அறிவிக்கப்பட்டு இருந்ததால் இரும்பு பாலம் இடிந்தாலும் எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை. 3 தூண்கள் இடிந்ததை தொடர்ந்து 24 தூண்களுடன் 800 மீட்டர் நீளத்திலான அந்த பாலத்தின் இரு பகுதிகளும் பொதுமக்கள் நடமாட முடியாதபடி அடைக்கப்பட்டன.

இந்த பாலம் இடிந்து விழ காரணம் பழைமையே என்று அரசாங்க தரப்பில் சொன்னாலும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் இது மணல் கொள்ளையினால் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விட்டது என பரபரப்பான குற்றசாட்டு சொன்னார்கள்..

இடிந்து விழுந்த இரும்பு பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் போன்ற வடிவமைப்புடன் சுமார் ரூ.80 கோடியில் கட்டப்பட்டு அது ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததால் போக்குவரத்துக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை. புதிய பாலத்தின் வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது காவிரி ஆற்றில் மட்டும் தான் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளின் வழியாக மட்டுமே சிறிதளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் கொள்ளிடம் ஆறு தற்போது மணற்பாங்காக காட்சி அளிக்கிறது. ஆற்றின் கரையோர பகுதிகளில் மட்டும் தண்ணீர் ஓடை போல் சென்று கொண்டிருக்கிறது.
 

S_O (1)


கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் இல்லாததால் புதிய பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் நன்றாக வெளியே தெரிகிறது. கொள்ளிடம் புதிய பாலத்தையும் 24 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதில் 17 முதல் 23 வரையிலான 7 தூண்கள் வெள்ளத்தில் ஏற்பட்ட மணல் அரிப்பினால் பிடிமானம் இன்றி காட்சி அளிக்கின்றன.

ஆற்றின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 15 அடி உயரத்துக்கு ஏற்கனவே இருந்த மணல் எல்லாம் அடித்து செல்லப்பட்டு விட்டதால் அஸ்திவார தூண்களின் கீழ் பகுதி வரை வெளியே தெரிகிறது. இதனால் புதிய பாலமும் வலுவிழந்து அதன் தூண்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்படலாம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது என அரசாங்க சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மண் அரிப்பின் காரணமாக புதிய பாலத்திற்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே இரும்பு பாலத்தில் உடைந்த விழுந்த தூண்கள், கற்கள் ஆகியவை ஆற்றுக்குள்ளேயே ஆங்காங்கு மலைக்குன்றுகள் போல் குவிந்து கிடக்கிறது. இதுவரை அதை அகற்றும் வேலைகளை செய்யவில்லை. இதனால், ஆபத்து வருவதற்கு முன்னதாக சரி செய்ய வேண்டும் என சலவை தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

சின்னம் தொடர்பான விவகாரம்; ம.தி.மு.க. முக்கிய கோரிக்கை!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Matters relating to symbols; MDMK Important request

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (27.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடுகையில், “பொதுச்சின்னங்கள் பட்டியலில் இல்லாத பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை. ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் வைகோ தரப்பில் வாதிடுகையில், “வேறு மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது. கடந்த 2010ஆம் ஆண்டு ம.தி.மு.க. அங்கீகாரத்தை இழந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தின் படி ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை வழங்க முடியாது. எனவே ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது’ எனத் தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 

இந்நிலையில் தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்க திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ம.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்காமல் மாநில கட்சியாக உள்ள ம.தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ம.தி.மு.க. மாநிலக் கட்சியாக இருப்பதால் கேட்கும் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ம.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது. மார்ச் 30 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளது. அப்போது ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்படும் சின்னம் குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.