Advertisment

எதிர்க்கட்சிக் கூட்டணிக்குப் புதிய பெயர்; பெங்களூரில் தொடங்கிய கூட்டம்

New Name for Opposition Alliance; The meeting started in Bangalore

Advertisment

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் திமுக சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்றும் (17.7.2023), நாளையும்(18.7.2023) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் பெங்களூரில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தற்போது துவங்கியுள்ளது. நாளை விரிவான ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து இன்று ஆலோசிக்கப்பட இருப்பதாகத்தகவல்கள் வெளியாகி உள்ளது.

2024 நாடாளுமன்றத்தேர்தலுக்கான கூட்டணி, குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டம் உள்ளிட்டவை குறித்து நாளை விரிவான ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொதுக்கூட்டங்கள் நடத்துவது; போராட்டங்கள்; கருத்தரங்கங்கள் நடத்துவது குறித்து நாளை முடிவு செய்யப்படும் எனவும், போராட்டங்கள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைப்பதற்காகத்தனித்தனி குழுக்கள் அமைக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

நாளை காலை 11:00 மணிக்குத்தொடங்கும் கூட்டம் பிற்பகல் 3.30 வரை நடைபெறும். இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டுதல், கூட்டணிக்குத்தனிச் செயலகம் அமைத்தல் பற்றி ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

Bengaluru elections
இதையும் படியுங்கள்
Subscribe