Skip to main content

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சென்றால் 10,000 ஃபைன் ; பத்து மடங்கு எகிறிய அபராதங்கள்!

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

New Motor Vehicle Act

 

போக்குவரத்து விதிமீறல்களுக்கு 10  மடங்கு அபராதம் விதிக்கும் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாகன விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கும் நடவடிக்கையாக இந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருந்த நிலையில், தமிழக அரசும் இது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. இனி புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அனைத்து வாகன விதிமீறல்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. விதிகளை மீறுவோருக்கான அபராத பட்டியலும் வெளியாகியுள்ளது.

 

அதன்படி தலைக்கவசம் அணியாவிட்டால் முன்பு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறை பிடிபட்டால் 500 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபட்டால் 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் முன்பு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முதல் முறை பிடிபட்டால் 10,000 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபட்டால் 15 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

 

ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் முன்பு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறை பிடிபட்டால் 500 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபட்டால் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கினால் முன்பு 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

ஆபத்தான முறையில் பயணம் செய்தால் முன்பு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறை சிக்கினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை சிக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

சாலை பந்தயத்தில் ஈடுபட்டால் முன்பு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறை சிக்கினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை சிக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள், அவசர சேவை வாகனங்களுக்கு சாலையில் வழிவிடாமல் சென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...5 சுங்கச்சாவடிகளில் டுவிஸ்ட்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
From the first day of April; Twist at 5 toll booths

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

நீதிமன்றம் போட்ட போடு - பதவி விலகும் ஆளுநர்?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
the governor to resign?

நேற்று உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திடீர் முடிவு ஒன்றை ஆளுநர் எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்தது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாக சென்று கொண்டிருந்தது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, ஆளுநர் உரை, திருக்குறள், சனாதனம் எனப் பல்வேறு சர்ச்சைகளில் ஆளுநர் சிக்கி வந்த நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.