Advertisment

மலை கிராமங்களில் புன்னகை திட்டம்..! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

New medical Project in Hill Villages..! – Minister ma.subramaniyn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை நடந்த அரசு நிகழ்ச்சியில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர், "தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிதிநிலை அறிக்கையின் போது 136 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அந்த 136 அறிவிப்புகளும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் வழி காட்டுதல்படி மக்கள் நல்வாழ்வுத் துறையின் அனைத்து அறிவிப்புகளும் அடுத்த நிதிநிலை அறிவிப்புக்குள் நிறைவேற்றப்படும். அந்த வகையில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று இன்று ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் இருக்கும் ஓசூர் என்ற இந்த கிராமத்தில் குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அறிவிப்பு எண் 90-ன் படி தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கொடைக்கானல் மற்றும் பழனி. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கன்னியாகுமரி மாவட்டம், திருச்சி மாவட்டம் உள்பட 12 இடங்களில் பழங்குடியினர் வசிக்கும் வட்டாரத்தில் கருவுற்ற தாய்மார்கள் இடையே ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிந்து அந்த நோய்க்கு மரபணு ஆலோசனை வழங்கும் ஒவ்வொரு இடத்திற்கும் ரூ.14 லட்சம் வீதம், ஒரு கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த திட்டத்தை இந்த கிராமத்தில் தொடங்கி வைத்திருக்கிறோம். வீடுகள் தோறும் தேடிச்சென்று வளர் இளம் பெண்களுக்கும் கருவுற்ற தாய்மார்களுக்கும் இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இரத்த சோகை நோய் பாதிப்பு மலை கிராம மக்களிடையே பரவி வரும் சூழ்நிலையில் அதை தடுப்பதற்கும் இந்த நோயின் தன்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொதுவாக ஆணும் பெண்ணும் இருவருக்கும் இந்த நோய் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அந்த நோய் பாதிப்பு இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. எனவே அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படும் சூழ்நிலையில் அவர்களுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் ஓ.ஆர்.எஸ் என்ற கரைசல் மருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தரப்பட்டு வருகிறது. அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என செவிலியர்கள் சொல்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் தாளவாடி மருத்துவமனையில் பெரிய அளவு வசதிகள் இல்லை என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கு பிரேதப் பரிசோதனை செய்யும் வசதி இல்லை. ஏற்கனவே இதற்காக ஒரு கட்டிடம் இருந்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக அவை நடைமுறையில் இல்லை.

தற்போது இறப்பு ஏற்பட்டால் அவர்களை சத்தியமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் பெரிய அளவில் சட்ட சிக்கல் கூட ஏற்படும். எனவே பிரேதப் பரிசோதனை கூடம் ஒன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான் அதிகாரிகளிடம் பேசி தாளவாடி பகுதிக்கு பிரேதப் பரிசோதனை ஏற்படுத்தி தர இருக்கிறோம். மேலும் தாளவாடி மருத்துவமனையில் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் கடிதம் தந்துள்ளார்கள். அது குறித்தும் சென்னைக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காக்கும் திட்டம், தொலைதூர மருத்துவ சேவை, 2025க்குள் காச நோய் இல்லாத தமிழகம் இப்படி பல திட்டங்களை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தொழு நோய் இல்லாத தமிழகம் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர புன்னகை என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மலை கிராமத்தில் படித்த பெண் ஒருவருக்கு கம்ப்யூட்டர் வாங்கி கொடுக்கப்பட்டு அந்தப் பெண்ணுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அந்தப் பெண்ணின் மூலம் வழங்கும் வகையில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 45 மலை கிராமங்கள் உள்ளன. இந்த 45 மலை கிராமங்களிலும் புன்னகை திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அந்தந்த மலை கிராமங்களுக்கு இணையதள வசதி, படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அந்த இளைஞர் மருத்துவர்களோடு பேசி அந்த மலை கிராம மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முடியும். முதல்வர் கவனத்திற்கு இது குறித்து கொண்டு செல்லப்பட்டு தேவையான நிதி ஆதாரம் பெறப்படும்.

சினை முட்டை தானம் என்பது சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 21 வயது முதல் 35 வயதுக்குள் பெற்றெடுக்கிற தாயின் சினை முட்டை மட்டுமே பெற வேண்டும் என சட்டம் இருக்கிறது. ஆனால், இங்கு ஈரோட்டில் 16 வயது இளம்பெண்ணிடம் 6 மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் நான்கு மருத்துவமனை, மற்ற இரண்டு ஆந்திரா கேரளாவில் உள்ளது. இது தொடர்பாக நமது துறையின் செயலாளர்கள் அந்தந்த மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனைகள் என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் போலி மருந்து, தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவத்துறையில் விரைவில் 4318 பணியிடங்கள் நிரப்பப்படும்" என்றார்.

Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe