Skip to main content

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர்... யார் இந்த கே.எஸ்.அழகிரி!!

Published on 03/02/2019 | Edited on 03/02/2019

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஆகும்.  சம்பந்தம்-  கமலா தம்பதியரின் மகனாக 22.10.1952-இல் பிறந்தார் அழகிரி.  புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்தவர் பி.யு.சி எனப்படும் புதுமுக வகுப்பு மற்றும் இளங்கலை ஆங்கில இலக்கியம் பட்டப்படிப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலேயே இடதுசாரி சிந்தனையுடன் வளர்ந்த அழகிரி தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவரான கே பாலகிருஷ்ணன் போன்றவர்களுடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

 

 

KS Azhagiri, a person of the opinion and deep thinking

 

பின்னாட்களில் அப்போதைய பாரத பிரதமர் இந்திராகாந்தியால் வங்கிகள் தேசியமயாக்கப்பட்டது போன்ற அதிரடி திட்டங்களால் கவரப்பட்டு மாணவர் காங்கிரசில் இணைந்தார்.  அதேசமயம் காங்கிரஸிலிருந்த பழ.நெடுமாறனுடன்  பழக்கமாகி தமிழ்தேசிய உணர்வுடனும் வளர்ந்தார்.

 

 

 

கல்லூரி பட்டப்படிப்புக்கு பிறகு இளைஞர் காங்கிரசில் இணைந்து செயல்பட்டு 1980-இல் அதன் மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.  தங்கபாலு இளைஞர் காங்கிரசின் தலைவராக தங்கபாலு இருந்தமையால் அவருடன் தொடர்பும் பழக்கமும் ஏற்பட்டது.  மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எம்.பி.சிவசுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன் போன்ற தலைவர்களுடனும் நெருக்கமாக பழகி வந்தார். பின்னர் காங்கிரஸில் மூப்பனார் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது தனக்கிருந்த தமிழ்தேசிய உணர்வினால் நெடுமாறனுக்கு ஆதரவாக வாக்களித்தார்.  ஆனால் பின்னாட்களில் ப.சிதம்பரம் மூலம் மூப்பனாரிடம் அறிமுகப்படுத்தப்பட்டு மூப்பனாரின் தளபதிகளில் ஒருவராக விளங்கினார்.

 

 

 

1986-ல் ப.சிதம்பரம் சிபாரிசின் பேரில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட கே எஸ்.அழகிரி அப்போது திமுக சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை தோற்கடித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினரானார்.  பின்னர் 1996 சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் - திமுக கூட்டணியில் போட்டியிட்டு  மீண்டும் சிதம்பரம் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2009 மக்களவைத் தேர்தலில் கடலூர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

 

 

 

இதனிடையே 1996 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்தது பிடிக்காமல்  அதிருப்தியில் இருந்த மூப்பனாருக்கு அழகிரி, பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் உதவிகரமாக இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் உருவாவதில் உற்ற துணையாக இருந்தனர்.  பின்னர் காங்கிரஸ் - தமாகா இணைப்புக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் மாநில நிர்வாகக்குழு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பொறுப்புகளை வகித்து வந்தார்.

 

 

 

கே.எஸ்.அழகிரி கீரப்பாளையம் ஒன்றிய ஒன்றிய குழு தலைவராக இருந்த போது இந்திராகாந்தி தையல் பயிற்சி நிலையம் தொடங்கி மகளிர் தொழில்முனைவோரை உருவாக்கினார்.  மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் இல்லாத காலகட்டத்திலேயே  மகளிர் குழுக்களை தொடங்கி அவர்களுக்கு வங்கிகள் மூலம் சுய தொழில் தொடங்க கடன் உதவி பெற்றுத்தந்தார். மேலும் திருமண நிதி உதவி திட்டத்தையும் நடைமுறைப்படுத்தினார்.  ‘லோன் மேளா’ என்கிற நிகழ்ச்சியை மூப்பனாரை கொண்டு தொடங்கியவர் அப்பகுதி இளைஞர்களுக்கும்,  பெண்களுக்கும் வங்கிகளிடமிருந்து கடனுதவி பெற்றுத்தந்தார்.  அந்த விழாவில் பேசிய மூப்பனார், ‘ கடன் வழங்கும் விழாவை நடத்திய அழகிரி, கடனை அடைக்கும் விழாவையும் நடத்த வேண்டும். அதிலும் நான் பங்கேற்க வேண்டும்’ என்று கூறினார்.

 

 

 

சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலங்களில் அழகிரி சட்டமன்றத்தில் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் கருத்துகளை முன்வைத்ததை கலைஞரே பலமுறை பாராட்டியுள்ளார்.  ஜெயலலிதா- சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமாக சட்டமன்றத்தில் இவர் பேசிய கருத்துகள் அவ்வழக்குக்கு வலுசேர்க்கும் கருத்துகளில் ஒன்றாக இருந்துள்ளது.  அவர் சட்டமன்றத்தில் பேசிய பேச்சுகளை ‘சட்டமன்ற உரைகள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டு ஆவணமாக்கியுள்ளார். சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள்  அக்காலத்தில் பரவலான வரவேற்பே பெற்றது.  கடலூர் எம்.பியாக  இருந்த காலகட்டத்தில் என்எல்சிக்கு  நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை ஐந்து லட்சமாக உயர்த்த காரணமாக இருந்தார். அதேபோல் வீட்டுமனை கொடுத்தவர்களுக்கு மூன்றிலிருந்து ஐந்து சென்ட் இடம் உயர்த்தி பெற்றுத்தரவும் காரணமாக இருந்துள்ளார்.

 

 

 

 

கே.எஸ்.அழகிரிக்கு ஐந்து மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூன்று பெண்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் தமிழரசு சம்பந்தம் M.Tech முடித்துவிட்டு அழகிரி ஆரம்பித்த காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்