New laws brought into force CM M K Stalin order

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களின் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில் மத்திய அரசால் அவை ‘பாரதிய நியாய சன்ஹிதா 2023’, ‘பாரதிய நாகரிக் கரக்ஷா சன்ஹிதா 2023’ மற்றும் ‘பாரதிய சாக்ஷியா சட்டம், 2023’ என மாற்றப்பட்டு 01.07.2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

Advertisment

 New laws brought into force CM M K Stalin order

நாடாளுமன்றத்தில் 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள விருப்பமில்லாமல் மத்திய அரசு அவசர கோலத்தில் இச்சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றியது. நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தினைப் பிரதிபலிக்கும் இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைத் தெளிவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 17-6-2024 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படைப் பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு மாநில அரசுகளிடமிருந்து முழுமையாக கருத்துக்களைப் பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும் முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.

Advertisment

 New laws brought into force CM M K Stalin order

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (08.07.2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர் காவல்துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைத்திட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம். சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.