NEW IT RULES CHENNAI HIGH COURT

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்த நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்தது.

Advertisment

இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேசன் மற்றும் பிரபல பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

அந்த மனுவில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி சுய ஒழுங்குமுறை நடைமுறை இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை, சம்பந்தப்பட்ட பப்ளிஷரின் விளக்கம் கேட்காமல் முடக்கம் செய்ய தகவல் தொழில்நுட்பதுறை செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும், இது தன்னிச்சையானது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை முடக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் பிரிவின் அடிப்படையில் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

Advertisment

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அதேசமயம், இந்த விதியின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மனுதாரர் சங்கம், இடைக்கால நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.