Skip to main content

மதுரையில் புதிய கிரானைட் குவாரிகள் தொடங்க புதிய உரிமம் வழங்கக் கூடாது! – தமிழக அரசுக்கு உத்தரவு!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

New granite quarry in Madurai case in highcourt

 

மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளைத் தொடங்க, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிய உரிமம் வழங்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகம் முழுவதும் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரி,  டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது கிரானைட் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயம் பொருத்தமான நபர் இல்லை.  அவர் அளித்த அறிக்கையே கையில் கிடைக்காத நிலையில், அந்த அறிக்கையை மேற்கோள்காட்டி, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. விதி மீறியவர்கள் என அனைத்துக் குவாரிகளையும் மூடியுள்ளது. சகாயம் பரிந்துரைத்துள்ள 80 முதல் 90 சதவீதம் வரையிலான பறிமுதல் (Recovery) சதவீதம் என்பது அபரிமிதமானது. அது ஏற்கக் கூடியது அல்ல’ என்று குற்றம் சாட்டினார்.

 

தமிழக அரசுத் தரப்பில், தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, ‘நீதிமன்ற உத்தரவின்படி மாநில - மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சட்ட ஆணையர் சகாயம் அளித்த 212 பரிந்துரைகளில், 131 மட்டுமே தமிழக அரசால் ஏற்கக்கூடியது. 67 ஏற்கக் கூடியது அல்ல. மீதமுள்ள 14 பரிந்துரைகள், மத்திய அரசு முடிவெடுக்க வேண்டியவை ஆகும்.

 

சகாயம் அறிக்கை குறித்த அரசின் நிலைப்பாட்டை ஆராயும் வகையில் பொதுவான ஒரு வழக்கறிஞரை நியமித்து நீதிமன்றம் முடிவெடுக்கலாம். மேலும், மதுரை மாவட்டத்தில் வழக்குத் தொடர்புடைய குவாரிகளைத் தவிர, பிற குவாரிகள் இயங்குகின்றன. புதிய இடங்களில் குவாரிகள் அமைக்க உரிமம் வழங்குவது குறித்து யோசித்து வருகிறோம்’ எனத் தெரிவித்தார்.  

 

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘உயர் நீதிமன்றம் 2014-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, சிறப்பு அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்த பின், அவரது பரிந்துரைகளை ஏற்கக் கூடாது என கிரானைட் உரிமையாளர்கள் எப்படிக் கோரமுடியும்? கிரானைட் உரிமம் வழங்குவது குறித்து, மத்திய அரசின் அமைப்பு மட்டுமே முடிவெடுக்க முடியும். சகாயம் குழுவின் அறிக்கை கிடைக்காவிட்டாலும், ஏற்கனவே வழக்குப் பதிந்துள்ளதால், நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது.  

 

cnc

 

குறிப்பாக கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமாகும் வகையில், அளவுக்கு அதிகமாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக சகாயம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யானை மலை மட்டுமே மிச்சமுள்ளது. அதிலும் சில பகுதிகள் வெட்டப்பட்டுள்ளது.  

 

மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகள் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் கனிமங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். அவற்றைக் கண்காணிப்பதற்காகவே, எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளை தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிய உரிமம் வழங்கக் கூடாது’ என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்