New govt arts and science colleges to be started CM mk stalin announcement

கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முன்னோடித் திட்டங்களால் தமிழ்நாட்டில் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அத்தேவைகளை நிறைவேற்றும் விதமாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த 26ஆம் தேதி (26.05.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து வரப்பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் தற்போது கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இக்கல்வியாண்டில் (2025-2026) மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உயர்கல்வித் துறை சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம், திருச்சி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் தொடங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இப்பகுதியிலுள்ள 1 ஆயிரத்து 120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.