Skip to main content

பரவும் உண்ணி காய்ச்சல்... திருச்சி டீன் எச்சரிக்கை

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

Trichy Dean Warning!

 

தமிழகத்தில் பருவநிலை காரணமாக இன்ஃபுளுயன்சா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைகளை மருத்துவமனைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு சார்பில் காய்ச்சல் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புதிய காய்ச்சல் ஒன்றைப் பற்றி  திருச்சி அரசு மருத்துவமனை டீன் செய்தியாளர்களைச் சந்தித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

 

அவர் பேசுகையில், ''ஸ்க்ரப் டைபஸ் என்ற இந்த காய்ச்சல் ஒரியண்டா சுட்டுகாமோஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறி. உண்ணி காய்ச்சல் என்று அழைக்கப்படும் இது யாருக்கு அதிகம் வருகிறது என்றால் அதிகமாக இந்த காய்ச்சல் பெண்களுக்கு தான் வருகிறது. மண்ணில், தரையில் கை வைத்து யார் அதிகம் புழங்குகிறார்களோ அவர்களுக்கு அந்த காய்ச்சல் அதிகமாக பரவ வாய்ப்பு இருக்கிறது.

 

உடலில் மார்பகத்திற்கு கீழோ, மறைக்கப்பட்ட பகுதியிலோ, முதுகு பகுதியிலோ புண் போன்ற ஆறாத அறிகுறிகள் இருந்தாலும், அம்மைக்கு வரக்கூடிய சிறு சிறு புள்ளிகளாக வரக்கூடிய தோலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் போன்றவையும் இதன் அறிகுறி. இவை சில நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மூளைக்காய்ச்சல் போன்று மாறிவிடுகிறது. வீட்டில் உள்ள செல்லப் பிராணிகள் வழியாகவும் இந்த உண்ணி காய்ச்சல் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் கண்ட நோயாளிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். அதை விடுத்து விட்டு மருந்தகங்களில் தாங்களாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.