
சேலம் சரக காவல்துறையில் புதிய டி.ஐ.ஜி., மாவட்ட எஸ்.பி. ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இடமாறுதல் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பலர், மீண்டும் புதிய இடங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுவருகின்றனர்.
கடந்த இரு நாட்களில் மாநிலம் முழுவதும் 72 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்திற்குப் புதிய டி.ஐ.ஜி. ஆக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இப்பொறுப்பில் இருந்துவந்த பிரதீப்குமார் இடமாறுதல் செய்யப்பட்டதை அடுத்து, புதிய டி.ஐ.ஜி.யாக மகேஸ்வரி திங்கள்கிழமை சேலத்தில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதேபோல், சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்.பி. ஆக இருந்த தீபா கணிகர் ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளார். தற்போது புதிய எஸ்.பி. ஆக அபிநவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் திங்களன்று எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் வந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
அதேபோல், சேலம் மாநகரக் காவல்துறை ஆணையராக பணியாற்றிவந்த சந்தோஷ்குமார் மாற்றப்பட்டு, புதிய ஆணையராக நஜ்மல் ஹோடா நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.