சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா கடந்த1964 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம்  பிலாஸ்பூரில் பிறந்தவர் ஆவார். இவர் பிலாஸ்பூரில் பள்ளிப் படிப்பையும்,  சி.எம்.டி. கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், கே.ஆர். சட்டக் கல்லூரியில் தங்கப் பதக்கத்துடன் எல்.எல்.பி. பட்டத்தையும் பெற்றார். மேலும் பிலாஸ்பூரில் உள்ள குரு காசிதாஸ் பல்கலைக்கழகத்தின் படிப்பு வாரியம் மற்றும் கல்வி கவுன்சிலின் உறுப்பினராக இருந்தார்.

ஜபல்பூர் பார் கவுன்சிலில் 1987ஆம் ஆண்டு சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து ராய்கர் மாவட்ட நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். அதோடு வருமான வரித் துறை, ராய்ப்பூர் நகராட்சி மன்றம் மற்றும் சத்தீஸ்கர் மாநில மின்சார அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கான நிலை ஆலோசகராக இருந்தார். ரோட்டரி அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர் ஆவார். இதனையடுத்து 2005ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு 2021ஆம் ஆண்டு பதவியேற்றார். அதன் பின்னர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (06.02.2024) பதவியேற்றார். 

மற்றொரு புறம் மத்தியப் பிரதேசம் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் சஞ்சீவ் சஜ்தேவா மத்தியப் பிரதேசம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விபு பாக்ரூ கர்நாடக உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போன்று பாட்னா  உயர் நீதிமன்ற பொறுப்பு  தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் அஷ்தோஸ் குமார் கவுகாத்தி உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி பட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டுள்ளார். திரிபுரா  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  அப்ரேஷ் குமார் சிங் தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எஸ். ராமச்சந்திர ராவ் திரிபுரா  தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.