Skip to main content

புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு?; விசாரணை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றம்!!

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
TN

 

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்தாக கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி நீதிபதி தங்கராஜ் ஆணையம் அமைக்கப்பட்டது. அவர் டிசம்பரில் ராஜினாமா செய்ததையடுத்து ஆணையராக நீதிபதி ரகுபதி நியமிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் இந்த விசாரணை ஆணையம் முன்னாள் முதல்வரான மு.கருணாநிதி, முன்னாள் துணை முதல்வரான மு.க.ஸ்டாலின், பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் 2015ஆம் ஆண்டு அனுப்பியது.

 

இந்த ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவும், தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யவும், ஆணைய நடைமுறைகளை எதிர்த்தும் மூவரும் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஆணைய விசாரணைக்கு 2015ஆம் ஆண்டில் தடைவிதிக்கப்பட்டது.

 

தடையை நீக்கக்கோரி ஆணையம் தாக்கல் செய்த மனுவை இந்த அண்டு ஜூலை மாதம் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆணையத்தை நிறுத்துவைத்தும், ஆணையத்தை கலைப்பது குறித்து அரசு பரிசீலிக்கவும் உத்தரவிட்டிருந்தார். மேலும் அரசால் ஆணையங்கள் அமைக்கப்படுவது மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆணையத்தின் பதவிகாலத்தை மேலும் முன்று மாதம் நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

 

 

இந்நிலையில் ஆணையத்தின் பொறுப்பிலிருந்து ஆகஸ்ட் 13ஆம் தேதி ராஜினாமா செய்வதாக அறிவித்து தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பினார். மீண்டும் அந்த பதவிக்கு யாரும் நியமிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, பிற ஆணையங்களின் காலத்தை நீண்ட நாட்களாக நீட்டிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

 

 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி புதிய ஆணையர் யாரும் நியமிக்கப்பட மாட்டார் என்றும், இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்த்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

அதனை ஏற்ற நீதிபதி வழக்கை முடித்து வைக்க முன்வந்த நிலையில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், தங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட வேண்டியுள்ளதால் வழக்கை நாளை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

 

 

அதனையேற்ற நீதிபதி சுப்ரமணியம் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார். மேலும், மக்களுடைய வரிப் பணம் வீணடிக்கப்படக் கூடாது என்பதிலும், தேவையில்லாமல் அரசு ஊழியர்களின் வேலை நேரமும் வீணடிக்கக் கூடாது என்பதிலும் நீதிமன்றம் கவனமாக இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் காரணங்களுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்