அதுமட்டும் நிரூபிக்கப்பட்டால் காவல் நிலையத்தை இடிக்க உத்தரவிடுவோம்! - உயர்நீதிமன்றம் அதிரடி!

new building police station chennai high court order

நீர்நிலையில் செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டது நிரூபிக்கப்பட்டால் இடிக்க உத்தரவிடுவோம் எனத் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் புதிய கட்டிடத்தில் காவல் நிலையம் செயல்படத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

'அறப்போர் இயக்கம்' சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'காஞ்சிபுரம் மாவட்டம், செம்மஞ்சேரியில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த இடம் தாமரைக்கேனி என்ற நீர்நிலை ஆகும். இந்த இடத்தை மேய்க்கால் புறம்போக்காக அறிவித்து காவல்நிலையம் கட்டியுள்ளது. இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) ஒப்புதல் பெறவில்லை. எனவே, நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்துக்குத் தடை விதிக்க வேண்டும். நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (15/04/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "நீர் ஆதாரமாக விளங்கும் இடத்தில் காவல் நிலையத்தைக் கட்டியுள்ளனர். எனவே, இதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அதை இடிக்க உத்தரவிடுவோம் எனத் தெரிவித்தனர். மேலும் புதிய கட்டிடத்தில் காவல் நிலையம் செயல்படத் தடை விதித்தும், மேற்கொண்டு கூடுதலாக எந்த ஒரு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

நீர்நிலையில் காவல் நிலையம் கட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்கள் குழு அமைக்க உரிய பெயர்களை பரிந்துரைக்குமாறு ஐஐடி இயக்குநர் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

building chennai high court police station
இதையும் படியுங்கள்
Subscribe