Advertisment

புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

mk stalin

"திரும்பும் திசைகளில் எல்லாம் சிக்கல்களால் பின்னப்பட்ட பேரிடர்களுடன் காட்சியளிக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் - ஏற்கனவே 2020-21ஆம் ஆண்டிற்கு வெளியிடப்பட்ட தமிழகத்திற்கான நிதிநிலை அறிக்கை, முற்றாகத் தோல்வி கண்டுவிட்டதால், புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்" என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 14.2.2020 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அரசின் சார்பில் நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்த “2020-2021 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை” மற்றும் அதன் “மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள்” எல்லாம் உருவிழந்து, “கரோனா பேரிடரால்”- அதன் காரணமாக ஏற்பட்டுள்ள மிகப் பெரும் பின்னடைவுகளால் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை இருக்கிறது என்பதை அ.தி.மு.க. அரசோ, அதன் நிதியமைச்சரோ, முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமியோ இன்னும் புரிந்து கொள்ளாதது கவலையளிக்கிறது; வேடிக்கையாகவும் இருக்கிறது.

Advertisment

ஏற்கனவே “4.56 லட்சம் கோடி ரூபாய்க் கடன்” என்ற சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிதிநிலை அறிக்கையில் - “மாநில அரசின் சொந்த வரி வருவாய் 1.33 லட்சம் கோடி கிடைக்கும்” என மதிப்பிடப்பட்டது ஆளுங்கட்சிக்கு “ஆறுதல் செய்தியாக” இருந்தது. அந்த ஆறுதலுக்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது.

மாநிலத்தின் மொத்த வரி வருவாயாக மதிப்பிடப்பட்ட ரூ.2.19 லட்சம் கோடியில், மேற்கண்ட 1.33 லட்சம் கோடி ரூபாய் சொந்த வருவாய் மூலம் கிடைக்குமா? என்பது “கேள்விக்குறியாக மட்டுமல்ல”- ஏற்கனவே சீரழிந்து விட்ட அ.தி.மு.க. அரசின் நிதி மேலாண்மையால், “கானல் நீராகவே” ஆகி, காணாமல் போய் இருப்பதுதான் தற்போதைய நிலவரம்.

“வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, வரலாறு காணாத கடன்” ஆகியவற்றின் கடும் பிடியில் மாநிலத்தை அ.தி.மு.க. அரசு சிக்க வைத்திருந்ததால் -தற்போதைய கரோனா- அதை மேலும் சிக்கலாக்கி - நிதிப் பேரிடரை உருவாக்கி, தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது.

இழந்த வரி வருவாயும் - சீரழிந்த நிதிநிலைமையும் மேலும் கவலைக்கிடமாகி - நிதிநிலை அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் “உயிர் பிழைக்குமா, இல்லையா” என்ற நிலையில் இன்றைக்கு “அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.)” இருக்கிறது.

தமிழ்நாட்டின் முதுகெலும்பான விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளும்- விவசாயத் தொழிலாளர்களும் அனைத்து வருவாயையும் இழந்து வெறுங்கையராய் இருக்கிறார்கள். மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 22.21 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 60 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடந்ததால், 1.42 கோடி தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டார்கள். 35 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சோதனைச் சாகரத்தில் மூழ்கி - வெளியே வர முடியாமல் திணறி நிற்கிறார்கள். இந்நிலையில் விவசாயிகளுக்கு மானியம், கடன் தள்ளுபடி, விவசாயம் செய்வதற்குக் குறைந்தபட்ச மூலதனம், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்பது - ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடி பண நிவாரணம் (Cash Relief) அளிப்பது, மிக முக்கியம்!

ஆனால், அதற்கான எந்தவொரு முயற்சியிலும் அ.தி.மு.க. அரசு முனைப்புக் காட்டுவதாகத் தெரியவில்லை!

இந்நிலையில், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, மாநில அரசின் நிதி நிலைமை என்று திரும்பும் திசைகளில் எல்லாம் சிக்கல்களால் பின்னப்பட்ட பேரிடர்களுடன் காட்சியளிக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் - ஏற்கனவே 2020-21ஆம் ஆண்டிற்கு வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கை, முற்றாகத் தோல்வி கண்டுவிட்டதால், நிச்சயம் மறுபரிசீலனை செய்திட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

“கரோனா ஊரடங்கால்” ஏற்பட்ட “மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் முழுவதையும் மாற்றி அமைப்பது” உள்ளிட்ட விசாரணை வரம்புகளுடன், ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன் அவர்கள் தலைமையில் மே 9-ஆம் தேதி ஓர் உயர்மட்டக் குழுவினை அ.தி.மு.க. அரசு அமைத்திருக்கிறது என்றாலும், அந்த உயர்மட்டக் குழுவிடம் “இடைக்கால அறிக்கை” எதையும் அ.தி.மு.க. அரசு கோரவில்லை.

http://onelink.to/nknapp

“மூன்று மாதங்களுக்குள் அந்தக் குழு அறிக்கை அளிக்கலாம்” என்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் - அந்த அறிக்கை கிடைக்கப் பெற்று - அதன்மீது அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுப்பதற்குள், 2020-21 ஆம் நிதியாண்டின் நான்கு – ஐந்து மாதங்கள் வீணாகி விடும்.

ஆகவே, மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைக் கருத்தில் கொண்டும் - பல தரப்பட்ட மக்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பினைக் கவனத்தில் வைத்தும், 2020-21 ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்; அந்தக் கட்டாயத்தைத் தட்டிக் கழித்துவிட முடியாது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தக்க காலத்தே உணர்ந்து, தாமதியாமல், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

budget statement
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe