
சென்னையை சேர்ந்தவர் சரவணன் (23). இவர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சேர்ந்த கவிப்பிரியா (18) என்ற பெண்ணுடன் இவருக்கு அறிமுகமாகியுள்ளது. முதலில் நட்பாக தொடங்கிய இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கவிப்பிரியாவுக்கு தாய், தந்தை கிடையாது. பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் தெரிந்து வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சரவணன், கவிப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சரவணன் தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் வசித்து வந்தார். சரவணன் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு கவிப்பிரியா சமையல் செய்து கொண்டிருந்தார். இதற்காக அடுப்பைப் பற்ற வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அடுப்பைப் பற்ற வைக்க மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கவிப்பிரியாவின் கை, கால் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு அலறினார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது 50 சதவீத தீ காயத்துடன் கவிப்பிரியா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.