Skip to main content

கர்ப்பிணிகள் நலன் காக்க வந்தாச்சு 'தாய்மையுடன் நாம்' புதிய செயலி அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார்

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

A new app for pregnant women! Minister Ma Subramaniyan

 

கர்ப்பிணிகளுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் வழங்க ஏதுவாக 'தாய்மையுடன் நாம்' என்ற புதிய செயலியை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

 

நாமக்கல் மாவட்டம், வினைதீர்த்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோனூர், எர்ணாபுரம், பிள்ளாநல்லூர், வினைதீர்த்தபுரம் ஆகிய நான்கு சுகாதார நிலையங்களில், 93 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா சனிக்கிழமை (அக். 15) மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் புதிய கட்டடங்களை திறந்து வைத்தனர். 

 

மாவட்ட நிர்வாகம் சார்பில் கர்ப்பிணிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட 'தாய்மையுடன் நாம்' என்ற செயலியை அமைச்சர் சுப்ரமணியன் தொடங்கி வைத்து, பேசியதாவது; “டெல்லியில் செயல்பட்டு வருவது போன்ற நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் 708 நகரங்களில் தொடங்கப்பட உள்ளன. இந்த மையங்களில் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவியாளர் என நான்கு பேர் பணியாற்றுவார்கள். இதற்காக 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. நாமக்கல் நகராட்சியில் 7 மையங்கள் அமைக்கப்படும். 

 

மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ள 'தாய்மையுடன் நாம்' என்ற செயலி, கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தொடர் கண்காணிப்பு செயலியாகும். ஒரு பெண் கர்ப்பிணியானது முதல் அவருக்கு குழந்தை பிறந்த பிறகும் மொத்தம் 1000 நாட்களுக்கு இந்த செயலி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த செயலியில் கர்ப்பிணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படும். தற்போதைய நிலையில், ஒரு கர்ப்பிணியின் சிகிச்சை விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள பல்வேறு பதிவேடுகளை பார்வையிட வேண்டிய நிலை உள்ளது. இந்த புதிய செயலி மூலம் இனி மாவட்டத்தின் எந்த ஒரு அரசு மருத்துவரும் கர்ப்பிணியின் சிகிச்சை விவரங்களை அறிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகளை வழங்க முடியும். 

 

இதன் மூலம் பிரசவ காலங்களில் ஏற்படும் கர்ப்பிணி தாய்மார்களின் மரணங்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் பெருமளவு குறைக்கப்படும். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்மாதிரி திட்டம் ஆகும். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகள் கிட்டத்தட்ட முழுமை பெற்றுள்ள நிலையில், குடிநீர் தேவை முக்கிய பிரச்சனையாக உள்ளது. 

 

முதல்வரின் உத்தரவின் பேரில் குடிநீர் தேவைக்காக 7.83 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 3 மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சித்த மருத்துவக் கல்லூரி அமைப்பதன் முதல்படியாக 50 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும். ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு புதிய இடத்தில் 36 கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் விரைவில் கட்டப்பட உள்ளன.” இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்