Skip to main content

புதிதாக 530 மருத்துவர்களை நியமிக்க முதல்வர் உத்தரவு!

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்த 35 பேரில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 

NEW 530 DOCTORS APPOINTED CM PALANISAMY ORDER

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

NEW 530 DOCTORS APPOINTED CM PALANISAMY ORDER

ஆலோசனைக்கு பிறகு, புதிதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1508 ஆய்வக டெக்னீசியன்களை நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மருத்துவர் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்படும் நபர்கள் மூன்று நாளில் பணியில் சேரவும், புதிதாக 200 ஆம்புலன்ஸ்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு; சிவகாசி மருத்துவர்கள் நல்கிய உடலுழைப்பு!

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Doctors planting saplings in the Miyawaki method

 

இந்த உலகம் எதனால் யாரால் வாழ்கிறது என்றால், தனக்கென வாழாது பிறருக்கென வாழும் ஒரு சிலரால்தான் என மூதோர் கூறியுள்ளனர். தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்தலே பிறப்பின் இன்பம் என்பதை அவ்வப்போது யாரோ செய்யும் சேவைகளின் மூலம் பார்த்திருப்போம். சிவகாசியிலும் அப்படியொரு சேவையில் பல மருத்துவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ஆனால், அது மருத்துவ சேவையல்ல. சேற்றிலும் சகதியிலும் இறங்கி இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக உடலுழைப்பை நல்கிய சேவை அது.  

 

சிவகாசி பெரியகுளம் கண்மாயின் வடமேற்கு கரையில், கழிவுநீர் தேக்கக்குட்டை கரையில், மியாவாக்கி முறையில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது, சிவகாசி மருத்துவர்கள் அனைவரது பங்களிப்போடு நடந்தது. அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை என எப்போதும் பரபரப்பாக இயங்கும் மருத்துவர்கள், ஆர்வத்துடன் மரக்கன்றுகளை  நடவு செய்து வியப்பில் ஆழ்த்தினர்.   

 

Doctors planting saplings in the Miyawaki method

 

இச்சேவையில் டாக்டர்களான சுப்புராஜ், ரகுநாதன், கதிரவன், பாலசுப்பிரமணியன், சோலைக்குமார், ரத்தினம், சண்முகராஜ், ராஜேஷ் தர்க்கர், மணிகண்டன், பரத், சுதா மற்றும் பல பெண் மருத்துவர்கள் முனைப்புடன் ஈடுபட்டனர்.  பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகளின்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். சிவகாசி மருத்துவர்களோ, பெரிய அளவில் பணியாளர்களே இல்லாமல் தாங்களே பணியாளர்களாக மாறி செயல்பட்டனர். நமது சமுதாயத்தில் சமூக சேவையின் அவசியம் பலவழிகளிலும் வலியுறுத்தப்படுகிறது. 

 

மியாவாக்கி: நகரங்களில் காலியாக இருக்கும் பகுதிகளில் அல்லது வீடுகளின் பின்புறங்களில் உள்ளூர் மரங்களையும் அவற்றின் விதைகளையும் கொண்டு குறுங்காடுகளை உருவாக்குவதே மியாவாக்கி முறையாகும். குறைந்த அளவுள்ள இடத்தில் அதிக மரங்களை நடுவதன் மூலம், சூரிய ஒளியைத் தேடி அவை உயரமாக வளரும் என்பதே இதன் அடிப்படை ஆகும்.

 

 

Next Story

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; உயிருடன் இருப்பவரை இறந்ததாக கூறிய மருத்துவர்கள்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Negligence in Erode Government Hospital

 

ஈரோடு மாவட்டம் சிவகிரி தலையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 75. டிவி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மினி.இவர்களுக்கு இரண்டு மகன் உள்ள நிலையில் மனைவி பத்மினி, மகன் வீட்டில் இருந்து வருகிறார். அவ்வப்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு வரும் ராஜசேகருக்கு, கடந்த 12 ஆம் தேதி மீண்டும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

 

இதையடுத்து உறவினர்கள் ராஜசேகரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக ராஜசேகரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு தலைமை மருத்துவமனையில் ராஜசேகரை பிரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலில் அவரை ஐ.சி.யூவில் சிகிச்சைக்காக அட்மிட் செய்து சிகிச்சை பார்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம்(14.10.2023) மருத்துவமனை தரப்பில் இருந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு ராஜசேகர் இறந்து விட்டதாகவும், அவரது உடல் பிணவறையில் இருக்கும் என்றும் கூறி உள்ளனர். மேலும் அதனை உறவினர்களிடம் தெரிவிக்கும் படியும் கூறி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை காவல்துறையினர் சிவகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு காவல்துறை மூலம் உறவினர்களுக்கு இது குறித்து தெரிவித்த போது அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராஜசேகரன் உடலைப் பெற அமரர் ஊர்தி எடுத்துக்க கொண்டு நேற்று(15.10.2023) அரசு தலைமை மருத்துவமனையின் பிணஅறைக்கு வந்தனர். அப்போது பிணவறையில் சென்று பார்த்த பொழுது ராஜசேகர் பெயரில் எந்த உடலும் வரவில்லை என்றும் கூறியுள்ளனர். அதன் பின் மருத்துவமனை நிர்வாகித்திடம் கேட்டபோது, ராஜசேகர் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் யாராவது தெரியாமல் கூறி இருப்பார்கள் என்றும் அசால்ட்டாக கூறியுள்ளனர்.

 

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் எப்படி இது போன்று கூறலாம் என்று முதலில் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ராஜசேகருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையைப் பார்த்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். அரசு மருத்துவமனையை நம்பி ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் நிலையில், இது போன்று ஒரு சில மருத்துவர்கள் செய்கின்ற சம்பவங்கள், பொது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உயிருடன் சிகிச்சை பெற்று வருபவரை இறந்து விட்டதாக கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.