ravi vaiko

Advertisment

மதுரையில் நியூட்ரினோ எதிர்ப்புக் கூட்டத்தில் தீக்குளித்த ம.தி.மு.க. நிர்வாகி ரவி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு ஆதவாக பல்வேறு அரசியல் கட்சிகள், மக்கள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை அறிவித்தார். அதன் தொடக்க நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் சனிக்கிழமை (மார்ச் 31) காலை நடைபெற்றது. நடைபயணத்தை வாழ்த்தி பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரமுகர்கள் பேசினர்.

Advertisment

அப்போது கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிநியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்யை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார். தலை, உடல் என தீப் பற்றிய நிலையில், அவர் இங்குமங்கும் ஓடினார். இதையடுத்து அவர் மீது மண்ணை போட்டு தீயை அணைத்தனர். அப்போது அந்த இளைஞர் தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் வரக்கூடாது என கூறினார்.

திடீரென கூட்டத்தில் ஒருவர் தீக் குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்த வைகோ உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வைகோ சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தார். உடனே அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

இந்த சம்பவத்தால் உணர்ச்சிபொங்க காணப்பட்ட வைகோ, தமது தொண்டர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என நிகழ்வு மேடையில் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.