Skip to main content

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நெல்லை தங்கராஜ் மரணம்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

Nellai Thangaraj, who became famous for the movie Pariyerum Perumal, passed away

 

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

 

மரபார்ந்த தமிழ்க் கலைகளின் முன்னோடியாக இருக்கும் தெருக்கூத்தில், பெண் வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்தவர் தங்கராஜ். கூத்து மரபில் பெண் வேடமிட்டு நடிப்பவர்களின் இயல்பு வாழ்க்கையும் அதே பெண் மனப்பாங்கோடே இருக்கும் என்பார்கள். அதுபோலவே இவரின் ஒப்பாரிக்கு கண்ணீர் சிந்தாதவர் இல்லை. அப்படி ஒருநாள் வெள்ளரி தோட்டத்தில் காவலில் இருந்தவரை எழுப்பி ஒப்பாரி பாடச் சொல்லிக் கேட்டு திரையில் நடிக்க வைத்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அத்திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்த நெல்லை தங்கராஜ் தனது சிறந்த நடிப்பால் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளைப் பெற்றார். வயதாகிவிட்டதால் தங்கராஜ் தெருக்கூத்தில் வேடம் கட்டி ஆடுவதை நிறுத்தி விட்டார்.  இரண்டு மகள்களையும் படிக்க வைத்துவிட்ட இவர், குடும்ப கஷ்டம் காரணமாக மனைவியுடன் சேர்ந்து எலுமிச்சை, பனங்கிழங்கு, காய்கறி போன்றவற்றை தன்னுடைய கிராமத்தில் விற்றுப் பிழைத்து வந்துள்ளார். அந்த வியாபாரமும் முடங்க ஒரு வேளை உணவுக்குக் கூட கஷ்டப்பட்டார். 

 

குடிசையில் வசித்த அவரின் வீடு பாழடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்துள்ளது. அவருடைய வீட்டை சீரமைத்துத் தர நெல்லை மாவட்ட ஆட்சியர் முன் வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்புகள், தமுஎகச மற்றும் நண்பர்களின் உதவியுடன் நாட்டுப்புற கலைஞர் தங்கராஜுக்கு வீடு கட்டப்பட்டது. இந்நிலையில் கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாலிவுட்டில் ரீமேக்காகிறது பரியேறும் பெருமாள்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
pariyerum perumal hindi remake update

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 இல் வெளியான படம் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு எனப் பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சாதி பிரச்சணையைப் பேசியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டையும் பெற்றது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாக சித்தார்த் சதுர்வேதி, த்ரிப்தி இம்ரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தடக் 2 என்ற தலைப்பில் உருவாக இப்படம் நவம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது. இதன் அறிவிப்பு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தத் தலைப்பின் முதல் பாகமான தடக் படம், சாய்ராத் என்ற மராத்தி படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகி வெளியானது. நாகராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தப் படம் ஆணவக் கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியிருந்தது. இந்தப் படமும் விமர்சன ரீதியாக பலரது பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

Next Story

"மக்களின் சுயத்தை கேள்வி கேட்டவர்" - மாரி செல்வராஜ் உருக்கம்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

mari selvaraj about Nellai Thangaraj

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில்  2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்ற நெல்லை தங்கராஜ், உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். மக்கள் கலைஞரான தங்கராஜ், பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதில் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நடிப்பால் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். அன்னாரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனிடையே மாரி செல்வராஜ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவரை தேடி கண்டுபிடித்து சினிமாவுக்கு கொண்டு வந்தேன். எங்க இரண்டு பேருக்கும் பயங்கரமான ஒரு உறவு. அப்பா பையன் போல... இப்பவும் வேலைக்கு போய்க்கிட்டு இருக்கிற மனுஷன். தன் குடும்பத்துக்காகவும் தனக்காகவும் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருந்தார். அவருடைய மரணம் மிகப்பெரிய வலியை கொடுத்திருக்கு. ஒரே ஒரு படத்தின் மூலம் நிறைய மக்களின் மனதில் இடம் பிடித்தவர். மேலும் இடம் பிடித்தவர்களிடம் அவர்களது அகத்தை, சுயத்தை கேள்வி கேட்டவர். அவருடைய வாழ்க்கையில் அவரது கனவுகள் தாமதமாகத் தான் ஆரம்பித்தது. அது சீக்கிரம் முடியும் என்று எதிர்பார்க்கவில்லை" என்றார்.