
சீரியல் கொலைகளால் பதற்றத்திலிருக்கிறது தென் மாவட்டங்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாளையின் சீவலப்பேரி படுகொலை பதற்றம் ஒரு வாரமாக நீடித்துத்தணிந்த பின்பு நேற்றைய தினம் நெல்லையின் பேட்டைப் பகுதியில் நடந்த கொலை மீண்டும் கொதிப்பைக் கீறியுள்ளது.
நெல்லையிலுள்ள சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூரைச் சேர்ந்தவர் நம்பிராஜன். பேட்டையிலுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருக்கிறது. தற்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு நம்பிராஜன் வழக்கம்போல் தனது நிறுவனத்திற்கு வேலைக்கு பைக்கில் சென்றிருக்கிறார். அவரை வேவு பார்த்து 2 பைக்குகளில் பின்தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று நம்பிராஜனை சுற்றி வளைத்தவர்கள் சரமாரியாக கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டுத்தப்பிச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த நெல்லை மாநகர துணை ஆணையர்சரவணக் குமார் தலைமையிலான போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நம்பிராஜனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, அங்கு அவர் மரணமடைந்திருக்கிறார்.

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நடுக்கல்லூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது உறியடி நிகழ்ச்சியை ஒரு தரப்பினர் வெகு விமரிசையாகக் கொண்டாடியிருக்கின்றனர். அது மற்றொரு தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த அது சமயம் ஒரு வாலிபரை மற்றொரு தரப்பினர் தாக்கியுள்ளனர். அந்த வாலிபர் விழா நடத்தும் இளைஞர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து நம்பிராஜன் உள்ளிட்ட இளைஞர்கள் மற்றொரு தரப்பினரின் பகுதிக்குள் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். இதன் காரணமாகவே இரு தரப்பினருக்குமிடையே பகைமை வளர்ந்திருக்கிறது. இந்தப் பகைமை முன்விரோதம் காரணமாக நம்பிராஜனை வேவு பார்த்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது என்கின்றனர் காவல்துறை தரப்பினர்.
இந்தக் கொலைச் சம்பவம் நடுக்கல்லூர், சுத்தமல்லி பகுதிகளைப் பதற்றமாக்க,பாதிக்கப்பட்ட தரப்பினர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணைச் செயலாளரான கல்லூர் வேலாயுதம் தலைமையில் நடுக்கல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் நீடிக்கவே அவர்களிடம் போலீசார் மற்றும் கோட்டாட்சியர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், உண்மைக் குற்றவாளிகளையும் தூண்டுதலாக இருந்தவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். நம்பிராஜனின் மனைவிக்கு நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும். கோரிக்கை நிறைவேறும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனர். போலீசாரின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட, சம்பவம் தொடர்பாக பாலசுந்தர், சிவமணி, ஆதி வேலாயுத பெருமாள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)