Skip to main content

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

நெல்லை பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான ராமசுப்பு மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தமிழக காங்கிரஸில் பிளவு ஏற்பட்ட போது வாசன் அணிக்கு சென்று பின் காங்கிரசுக்கே, திரும்பியவர் ராமசுப்பு. அவருக்கு ஆலங்குளம் நகரிலிருந்து இடைகால் அம்பை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க், கல்குவாரி இரண்டும் அடுத்தடுத்து உள்ளன. இந்தத் தொழிலில் நீண்ட காலமிருப்பவர். அதே சாலையில் அண்மையில்தான் கிரஷ்ஷர் பேக்டரியும், டைல்ஸ் விற்பனைக் கம்பெனியும் தொடங்கியிருக்கிறார் ராமசுப்பு. ஜல்லிக்கற்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
 

இன்று (26/02/2020) மதியம் ஒரு மணியளவில் நெல்லையிலிருந்து வந்த வருமான வரித்துறையின் 13 அதிகாரிகள், ராமசுப்புவின் பெட்ரோல் பங்க் மற்றும் கல்குவாரி போன்றவைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இவைகளையடுத்து அவரின் கிரஷ்ஷர், மற்றும் டைல்ஸ் கம்பெனிகளில் சோதனை நடத்தப்படலாம் என்கின்றனர்.
 

நாம் இது குறித்து எக்ஸ். எம்.பி. ராமசுப்புவைத் தொடர்பு கொண்டதில், அப்படியா ரெய்டா என்று பரபரப்பு காட்டியவர் போன்று பேசியவர், நான் வெளியூரிலிருக்கேன். ஏதாவது கணக்கு கேட்டு வந்திருப்பாங்க என்றார் அலட்டிக் கொள்ளாமல். ஆனால் சோதனையின் போது அவரது கார், ஸ்பாட்டில் நிற்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 Income Tax officials conducted a surprise raid at the office of a DMK official

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நா.அசோகன். வேலூர் மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஒப்பந்ததாரராகவும், தோட்டப்பாளையம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்தும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் வேலூரை சேர்ந்த கூடுதல் கமிஷனர் பூரணசந்திரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகி அசோகனுக்கு சொந்தமான தோட்டப்பாளையம் டி.பி.கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் மற்றும் அசோகனின் மகன் அரவிந்தன் இருந்துள்ளனர். பணம் ஏதேனும் இருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பணம் எதுவும் இல்லாத நிலையில் வங்கி தொடர்பான ஆவணங்களை கணினி மூலம் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது.  

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு இரவு சுமார் 9:43 மணிக்கு சோதனை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதில் பிரிண்டிங் பிரஸ்சின் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி அசோகனின் மகன் அரவிந்தன் கூறுகையில், 'முதலில் பணம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிட்டார்கள் பணம் எதுவும் கிடைக்காத நிலையில் வங்கி ஆவணங்களை மட்டும் சரிபார்த்து சென்றார்கள்' என கூறினார்.