
நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் பகுதியின் பக்கமுள்ள கால்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயியான அய்யப்பன். நெல்லையிலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளார். அப்போது அங்குள்ள பால விநாயகர் கோவில் அருகே திடீரென விஷம் குடித்தவர் மயங்கி விழுந்திருக்கிறார். அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் அய்யப்பனிடமிருந்த விஷ பாட்டிலைப் பறித்து விசாரணை நடத்தினர். அதில், தனது நிலத்தை போலி பத்திரம் மூலம் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை மீட்டுத் தரக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து போலீசார் சிகிச்சைக்காக அவரை பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக அய்யப்பன் வைத்திருந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அந்தக் கடிதங்களில் அவர், ராதாபுரம் தாலுகா, வேப்பிலான்குளம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கால்கரை கிராமத்தில் எனக்கு 1953ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்த 50 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது. அதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். என் சாவுக்குக் காரணம் ஆக்கிரமிப்பாளர்களே. அவர்களை விட்டு வைத்தால் கால்கரை கிராமத்தையே பட்டா போட்டு விற்று விடுவார்கள். என்னுடைய நிலத்தை மீட்டுத் தருவது போல் அந்தப் பகுதியிலுள்ள மற்றொருவர் நிலத்தையும் மீட்டுத்தர வேண்டும். ஆக்கிரமிப்பு குறித்து ராதாபுரம் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எனவே இதற்கு காரணமான அவர்கள் மீதும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்
இது போன்றே அவரது மகனுக்கும் அவர் எழுதிய கடிதத்தில், “அன்பு மகனுக்கு நமக்கு சொந்தமான இடத்தை விற்க வேண்டும். அந்த தொகையில் ரூ.2 லட்சம் ரூபாயை இலங்கையில் வறுமையால் வாழும் மக்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும். அதற்காக அந்தப் பணத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் விவசாயி ஒருவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.