Skip to main content

"சொந்த ஊருக்கு அனுப்பு..." வெளிமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்... போலீசார் மீது தாக்குதல்!

 

NELLAI DISTRICT KOODANKULAM PLANT MIGRANT LABOURS


"எங்களுக்கும் வயிறு இருக்கு! குடும்பமும் இருக்கு! நீங்கள் கூறியதை நிறைவேற்றவில்லை! நாங்கள் எங்கள் ஊருக்குக் கிளம்புறோம்! எங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்க!" என்கின்ற கோரிக்கையுடன் தலை வாசலை நோக்கி முன்னேறிய நிலையில், தங்களைத் தடுத்த போலீசார் மீது தாக்குதலைத் தொடங்கி போராடி வருகின்றனர் கூடங்குளத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளிகள்.

 

 

NELLAI DISTRICT KOODANKULAM PLANT MIGRANT LABOURS


நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டின் ஒத்துழைப்புடன் இணைந்து 1,000 மெகாவாட் மின்சாரத்தை அணு உலை மூலமாக தயாரித்து வருகின்ற கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம், இந்தப் பகுதியினை அணு உலை பூங்காவாக மாற்ற இருப்பதால் மூன்று மற்றும் நான்காம் பகுதியில் கட்டடப் பகுதிகளை கட்ட லார்சென் & டூப்ரோ (L & T) நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது. இக்கட்டிடப் பணிக்காக பஞ்சாப், ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வெளிமாநிலக் கூலித் தொழிலாளர்களை வரவழைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றது லார்சென் & டூப்ரோ நிறுவனம். பணி நிமித்தமாக வந்த மொத்தமுள்ள 3,350 வெளி மாநில ஒப்பந்தக் கூலித் தொழிலாளிகளும் வெளியே செல்லாதாவாறு உணவு, உறைவிடத் தேவைக்காக மூன்று மற்றும் நான்காம் வாசலுக்கு அருகில் கூடாரம் போட்டு அங்கேயே தங்க வைத்துள்ளது.
 

NELLAI DISTRICT KOODANKULAM PLANT MIGRANT LABOURS


இது இப்படியிருக்க, கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக வேலையில்லாத சூழல் கூலித்தொழிலாளிக்கு ஏற்பட, தாங்கள் தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுமென கோரிக்கை வைத்தனர். கூலித்தொழிலாளர்களை அனுப்பி வைத்தால் அடுத்து பணி ஆரம்பிக்கும் போது பாதிப்பு இருக்குமென கணக்குப் போட்ட கார்ப்பரேட் நிர்வாகம் அவர்களை அனுப்பி வைக்க மறுத்து உணவுத்தேவைக்கும், வேலை இல்லா நாட்களுக்கான சம்பளமும் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி கூலித் தொழிலாளிகளை தக்க வைத்தது. எனினும், வாக்குறுதிப்படி எதனையும் நிறைவேற்றவில்லை L&T நிறுவனம்.


தங்களது ஒப்பந்த நிறுவனம் கைவிட்டதால் மீண்டும் "சொந்த ஊருக்கு அனுப்பு". எனும் கோஷத்தை கையிலெடுத்து கடந்த 4- ஆம் தேதி நான்காம் பகுதி வாசலில் போராட்டத்தினை துவக்கினர் 3,350 வட மாநில கூலித்தொழிலாளிகள். அன்றைய தினம் அப்பகுதிக்கு வந்த ராதாபுரம் தாசில்தார் செல்வன், கூடங்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகதா உள்ளிட்டோர் தொழிலாளர்களுக்காக L&T நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையை துவங்க அவர்களும், "அடிப்படை வசதிகள், உணவுத்தேவைகளை நிறைவேற்றுவது, வேலையிழந்த நாட்களின் சம்பளத்தை உடனடியாக வழங்குவது." என்கின்ற அதே வாக்குறுதிகளை மீண்டும் கொடுக்க அப்போதைக்குப் போராட்டம் சுமூக நிலைக்கு வந்தது. 
 

NELLAI DISTRICT KOODANKULAM PLANT MIGRANT LABOURS


எனினும், தற்பொழுது வரை அந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை L&T நிறுவனம் என்பதால், கோபமடைந்த தொழிலாளிகள் இன்று (09/05/2020) காலை 09.30 மணியளவில் மூன்றாம் பகுதி வாசலை உடைத்துக் கொண்டு தலை வாசலை நோக்கி கூடங்குளத்தை விட்டு வெளியேற முன்னேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜெகதா அவர்களுடன் பேச்சு வார்த்தையைத் துவக்க, கட்டுக்கடங்காத கூட்டம் அவரை நெட்டித் தள்ளி, தாக்குதலை தொடங்கி முன்னேறியது. இதில் இன்ஸ்பெக்டர் ஜெகதாவும், காவலர் சக்தியும் காயமடைந்தனர். இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் உதவி பெற்ற நிலையில், காவலர் சக்திக்கு மட்டும் தலையில் தையல் இடப்பட்டது.


இதனால் இப்பகுதியில் பரபரப்புத் தொற்றிக்கொள்ள, மாவட்ட எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். எனினும், "சொந்த ஊருக்கு அனுப்பு" எனும் கோஷத்தை விடவில்லை  வெளிமாநிலக் கூலித்தொழிலாளிகள்.


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்