Nellai district administration explains about medical waste disposal

திருநெல்வேலி மாவட்டம் சீதற்பநல்லூர் அருகே உள்ள நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூட்டை மூட்டையாகக் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. அதாவது திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் அதிகப்படியாகக் கொட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இந்த மருத்துவக் கழிவில் மருத்துவமனையின் அனுமதிச் சீட்டுகள், ரத்தக் கசிவுகள், பஞ்சுகள் மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் கழிவுகளாகக் கொட்டப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை, ஊராட்சித்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம் அப்பகுதி மக்கள், ‘தமிழக - கேரள எல்லையில் வாகன சோதனையை அதிகரிக்க வேண்டும்’ என்று அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவைச் மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி பகுதியில் கொட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த கழிவுகளை கேரள அரசு அகற்ற வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவுவிட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் கேரள அரசு சார்பில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினர் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக திருநெல்வேலி வந்துள்ளனர்.

Advertisment

இதற்காக 70 பேர் கொண்ட 6 குழுவினர் 16 லாரிகளுடன் வந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகளை கொட்டிய நிகழ்வில் இன்று (22.12.2024) 18 லாரிகளில் கழிவுகள் கேரளாவுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 5-6 லாரிகள் நாளை (23.12.2024) அனுப்பப்பட உள்ளன. கழிவுகள் கொட்டப்பட்டிருந்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது வரை 5 குற்றவாளிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.