
நெல்லை நாகர்கோவில் செல்லும் சாலையின் வள்ளியூர் பக்கமிருக்கிற ஏர்வாடி நகரம் நெல்லை மாவட்டத்தில் வருகிறது. அங்குள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் ஆண்கள், பெண்கள் என சீனியர் சிட்டிஸன்கள் 67 பேர்கள் மற்றும் பணியாளர்கள் 15 பேர்கள் என 82 பேர் இருக்கின்றனர். நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்தும் இங்குள்ள காப்பகத்தில் அடைக்கலமாகியுள்ளனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள முதியவர்கள் சிலருக்குக் காய்ச்சல் தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. தகவலறிந்த நெல்லை சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குனர் வரதராஜனின் குழுவினர் ஏர்வாடிக் காப்பகத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியவர்கள், அங்கு கிருமிநாசினி தெளிப்பு பணியினைத் தீவிரப்படுத்தினர். மேலும், அவர்களைப் பரிசோதனை செய்ததில் 24 பேருக்குக் கரோனாத் தொற்று கண்டறியப்பட்டதால், அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனிடையே நேற்று முன்தினம் காப்பகத்தில் தங்கியிருந்த 90 வயது முதியவர் உட்பட மேலும் பலரைப் பரிசோதனை செய்ததில், அடுத்து 30 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை துணை இயக்குனர் வரதராஜன் நெல்லை மற்றும் மூன்றடைப்பு கோவிட் கேர் சென்டர் பகுதி சிகிச்சை முகாம்களுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார்.
அக்கம் பக்கம் தொற்றுக் குறைவு என்றாலும் முதியோர் காப்பகத்தின் அத்தனை முதியவர்களும் பாதிப்பானது அதிர்ச்சியானதால் விசாரணையை மேற்கொண்டனர் அதிகாரிகள். இதில் முதியோர்கள் சிலரின் உறவினர்கள் அவர்களைப் பார்ப்பதற்காக காப்பகம் வந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவருக்கு இருந்த தொற்று முதியவர்கள் அத்தனை பேருக்கும் பரவியது தெரியவந்திருக்கிறது. அனைவரும் முதியவர்கள் என்பதால் கூடுதல் கண்காணிப்புச் சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)