Nellai Bjp member

நெல்லையின் பாளை பெருமாள்புரம் தாமஸ் தெருவைச் சேந்தவர் ஜெபமணி (68). முன்னாள் ராணுவ வீரரான இவர், மறைந்த அரசியல் பிரமுகரான கராத்தே செல்வனின் உடன்பிறந்த அண்ணன். ராணுவ விடுப்பிற்குப் பின்பு, வங்கி ஒன்றின் செக்யூரிட்டிப் பணியிலிருந்த ஜெபமணி, தன்வசம் 2022 ஆம் ஆண்டு வரைக்கும்உரிமம் பெற்ற துப்பாக்கி ஒன்றும் வைத்திருக்கிறார்.

Advertisment

இதன் காரணமாக, வங்கிப் பாதுகாப்புப் பணியிலிருந்து ஓய்வுபெற்று வீட்டிலிருப்பவர் ஜெபமணி. இவரது அடுத்த வீட்டைச் சேர்ந்தவர் பெரியதுரை, தெருவின் பக்கம் கறிக்கடையும் நடத்திவருகிறார். தவிர பா.ஜ.க.வின் நெல்லை மாவட்ட இளைஞரணிப் பொதுச் செயலாளராகவுமிருப்பவர். இருவரும் அண்டை வீடுகள் என்றாலும் இவர்களுக்குள் எந்தவிதமான முன்விரோதமும் இருந்ததில்லையாம். சில நேரங்களில் துடிப்பாகப் பேசும் குணம் கொண்டவர் ஜெபமணி என்றும் சொல்லப்படுகிறது.

Advertisment

நேற்றைய தினம் பெரியதுரை தன் தந்தை லட்சுமணனுக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் நின்று கொண்டிருந்தவர், தற்செயலாக சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருக்கிறார். அந்தசமயம் அந்த வழியாக வந்த ஜெபமணி, "இங்க நின்னுகிட்டு எப்படி சிகரெட் பிடிக்கலாம் என்று துடுக்காகக் கேட்டுத் தகராறு செய்திருக்கிறார். என்னோட இடம். நா சிகரெட் புடிச்சா உங்களுக்கு என்ன வந்திருச்சி என்று கேட்டிருக்கிறாராம்" பெரியதுரை. இதனால் தகராறு முற்றவே ஜெபமணி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் பெரியதுரையை நோக்கி திடீரென்று சுட்டிருக்கிறார்.

இதில், அவரது கையில் குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட, சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பெரியதுரையை மீட்டு பாளை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்பாட்டுக்கு வந்த பெருமாள்புரம் போலீசார் முன்னாள் ராணுவவீரர் ஜெபமணி, அவரது மகன் சர்ச்சில் இருவரையும் கைது செய்ததுடன் அவர்களின் துப்பாக்கியையும் கைப்பற்றினர்.

Advertisment

cnc

நான் சுதாரித்துக் கொண்டதால் தப்பினேன் என்றார் பெரியதுரை. கட்சி நிர்வாகி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவலறிந்து மாவட்ட பா.ஜ.கதலைவர் மகராஜன் தலைமையில் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு பா.ஜ.க.வினர் திரண்டனர். சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவரை ஸ்டேஷன் கொண்டு வந்துவிட்டோம். விசாரணை நடக்கிறது. அனைத்தும் முறைப்படி நடக்கும் என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்ததால் பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர். ஆனால், அரசியல் புள்ளி மீது துப்பாக்கிச் சூடு என்ற விஷயம் பரபரப்பைக் கிளப்பிவிட்டது.