Skip to main content

மக்களுக்கு நஞ்சில்லா உணவு கொடுக்க போராடிய  ’நெல்’ ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை!

n

    

இன்று விவசாயத்தையும், மக்களையும் அழிக்க வந்துள்ள மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் மக்களுக்கு தினந்தோறும் நோய்கள், நோய்களுக்கு சிகிச்சை என்று அன்றாட வாழ்க்கை இப்படி போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நமது பாரம்பரிய  உணவு தானியங்களால் நோய் இல்லை. அதற்கு உரம், பூச்சி மருந்து இல்லை. இயற்கை விவசாயம்,  இலை தலைகளை வயல்களில் போட்டு நடவு நட்டால் போதும் அதிக  விளைச்சளை  பெறமுடியும். அந்த உணவே ஆரோக்கியமானது.

 

n


    இயற்கை உணவே மருந்தாக இருக்கும் என்று நம்மாழ்வார் சொல்படி திருத்துறைப்பூண்டி கட்டிமேடு ஆதிரங்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நெல் ஜெயராமன் தனது தேடல்களை தொடங்கினார். ஒவ்வொரு நெல்லாக தேடி தற்போது 150 பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்துவிட்டார். ஒவ்வொரு மே மாதமும் நெல் திருவிழா நடத்தி திருவிழாவுக்கு வரும் விவசாயிகளுக்கு 2 கிலோ நெல் கொடுத்து அடுத்த திருவிழாவுக்கு வரும் போது 4 கிலோ நெல்லை வாங்கி அடுத்தடுத்த விவசாயிகளுக்கு கொடுத்து தமிழகம் முழுவதும் பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு விவசாயிகளை தயார்படுத்திவிட்டார். இதனால் இவருக்கு குடியரசுத் தலைவர் விருதும் மற்றும் பல விருதுகளும் கிடைத்தது. விருதுகளுக்காக நெல்லை சேகரிக்கவில்லை. என் மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும். அதற்கு இயற்கையாக விளையும் பாரம்பரிய நெல் வேண்டும் என்பதால் தான் சேகரித்து வருகிறேன் என்று தொடர்ந்து தனது சேவையை செய்து வருகிறார்.


    இந்த நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இடியாய் இறங்கியது ஒரு தகவல். ஆம்.. சிறுநீரகத்தில் புற்றுநோய். அதன் பிறகு தனக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே நெல் திருவிழாவையும் நடத்திக் கொண்டு தான் இருக்கிறார். தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

 

n


    பாரம்பரிய நெல்மணிகளை மீட்ட நெல் ஜெயராமனுக்கு புற்றுநோய் என்றதும் இயற்கையை விரும்பும் விவசாயிகள் ஆடிப்போனார்கள். அடுத்தவருக்கு நோய் வந்துவிடக் கூடாது என்பதற்காக பாரம்பரிய நெல்லை மீட்டவருக்கே நோயா? 
  

 நெல் ஜெயராமன் சிகிச்சையில் இருக்கிறார் என்ற தகவல் அறிந்து நாம் தமிழர் கட்சி சீமான், நடிகர் சத்தியராஜ், பி.ஆர்.பாண்டியன், மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் நீடா கிரீன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு உள்ளிட்ட  பலர் நெல் ஜெயராமனை பார்த்துள்ளனர்.  எனக்கு ஒன்றுமில்லை விரைவில் குணமடைந்து வீட்டுக்கு வருவேன். வழக்கம் போல இன்னும் தேட வேண்டிய ரகங்களை தேடி விவசாயிகளிடம் கொடுத்து விதை வாங்குவேன். அழிவின் விளிம்பில் இருந்த 150 பாரம்பரிய விதைகளை மீட்டுவிட்டேன். இன்னும் பல ரகங்களை மீட்பேன் என்று மனதிடமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

 

n


    அவர் சிகிச்சையில் இருந்தாலும் திருத்துறைப்பூண்டியில் அவரது அலுவலகத்தில் விவசாயிகளுக்கு நெல் வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 
நீடா கிரீன் ராஜவேல்.. விவசாயிகளால் கைவிடப்பட்ட பழைய பாரம்பரிய நெல் ரகங்கள் கருப்பு கவுணி, அறுபதாம் குறுவை, குள்ளக்கார், கிச்சடி சம்பா, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, குடவாலை, காட்டுயானம், கூம்பாலை, குழியடிச்சான் போன்ற 150 ரகங்களை தேடித் தேடி கண்டுபிடிச்சு சேகரிச்சு வைத்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். நம் மக்கள் தற்போது உண்ணும் உணவால் தான் நோய்கள் அதிகமாக உருவாகிறது என்பதால் தான் இயற்கையா விளையும் நெல்லை உற்பத்தி செய்ய வேண்டும் என்று இந்த முயற்சியில் இறங்கினார். ஆனால் மற்றவர்கள் நஞ்சில்லா உணவுக்காக பாடுபட்டவருக்கு இப்படி ஒரு கொடிய நோய் வந்திருப்பது மன வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் அவர் மனதிடமாக இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வந்து நெல் திருவிழா நடத்த உள்ளார் என்றார். 


    விரைவில் குணமடைந்து மேலும் பல ரகம் நெல் விதைகளை சேகரித்து விவசாயிகளிடம் வழங்கி மக்களை நஞ்சில்லா உணவு உண்ண நெல் ஜெயராமன் வர வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கிறது.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்