Skip to main content

திருடனை விரட்டிய அக்கம் பக்கத்தினர்... பதற்றத்தில் நேர்ந்த அசம்பாவிதம்!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

Neighbors who chased away the thief ... An unfortunate incident in tension

 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகில் உள்ளது கொல்லூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். விவசாயியான இவர், தனக்குச் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வாங்கியுள்ளார். இதன் மூலம் தனது சொந்த நிலத்தில் விளைந்த நெல்லை அறுவடை செய்வது மற்றும் அக்கம்பக்கம் விவசாயிகளுக்கும் நெல் அறுவடை செய்ய வாடகைக்கு அனுப்புவது வழக்கம். அப்படிப்பட்ட நெல் அறுவடை இயந்திரத்தை அவரது வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருந்தார்.

 

நேற்று முன்தினம் (07.08.2021) இரவு 12 மணி அளவில் நாகராஜ் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது நெல் அறுவடை இயந்திரத்தைக் காணவில்லை. சற்று தூரத்தில் மர்ம நபர் ஒருவர் அந்த இயந்திரத்தை ஓட்டிச் செல்வது தெரியவந்தது. உடனே அப்பகுதியைச் சேர்ந்த அக்கம்பக்கத்தினரை சத்தம்போட்டு அழைத்த நாகராஜ், அவர்கள் துணையுடன் நெல் அறுவடை இயந்திரத்தை ஓட்டிச்சென்ற மர்ம மனிதனைத் துரத்திச் சென்றார். இதைப் பார்த்த அந்த மர்ம நபர், இயந்திரத்தை விட்டுவிட்டு குதித்து தப்பி ஓடியுள்ளார்.

 

நெல் அறுவடை இயந்திரம், அப்பகுதியில் உள்ள திருநாவுக்கரசு என்பவரது விவசாயக் கிணற்றின் தடுப்புச் சுவரில் மோதி நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதை ஓட்டிவந்த மர்மநபரைக் காணவில்லை. அவரைத் துரத்திச் சென்றவர்கள் அவரை அங்குமிங்கும் தேடினர். அப்போது கிணற்றுத் தண்ணீரில் மர்ம நபர் தத்தளிப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அரகண்டநல்லூர் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த மர்ம நபரை வெளியே கொண்டு வந்தனர்.

 

அவரிடம் நடத்திய விசாரணையில், திருக்கோவிலூரை அடுத்த சுந்தரேசபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் குப்புராஜ் என்பதும், நெல் அறுவடை இயந்திரத்தைத் திருடிக்கொண்டு செல்லும்போது மக்கள் துரத்துவதைப் பார்த்துவிட்டு குதித்துத் தப்பி ஓடும்போது தவறி கிணற்றுக்குள் விழுந்ததும் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவுசெய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்