Negligence of authorities; Tragedy happened to the electrician!

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழகங்களில் பணியாற்றி வரும் ஒப்பந்த அடிப்படையிலான கேங்மேன்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் தங்களுடைய பணி காலத்தில் மின்சார தாக்குதலுக்கு உட்பட்டு உயிரிழந்தால் தங்களுடைய குடும்பத்திற்கு எந்தவித அரசு உதவியும், வேலைவாய்ப்பும் கிடைக்காமல் போகும். எனவே அரசு தங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இதுபோன்ற கேங்மேன்களுக்கு, அவர்கள் போடும் வாய்மொழி உத்தரவில் பணியாற்றிட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

Advertisment

இந்நிலையில் நேற்று தென்காசி மாவட்டம், ரெட்டியார்பட்டியிலிருந்து ஒப்பந்த பணியாளரான ராஜீவ்காந்தி என்ற கேங்மேன் திருச்சி மலைக்கோட்டையில் 110கேவி எஸ்.எஸ்.சி.ல். பணியாற்றிட உரிய அனுமதி கடிதம் பெற்றுவந்துள்ளார். அப்படி பணியாற்றவரும் கேங்மேன்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலக பதிவேட்டில் கையெழுத்திட்டால் தான் சம்பளம் வழங்கப்படும். ஆனால் அவரை திருச்சி மின் பகிர்மான கழக டி.இ சண்முகசுந்தரம், மலைக்கோட்டையில் பணியாற்ற வந்தவரை திருச்சி மிளகுபாறை பகுதியில் 110கேவி எஸ்.எஸ்.சி.ல். பணியாற்றிட வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். மேலும் மலைக்கோட்டை ஏ.இ சுப்புலட்சுமி மறுப்பு தெரிவிக்காமல் அவருடைய பகுதியில் பணியாற்ற வந்தவரை, இந்த பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராஜீவ்காந்தி எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து 80 சதவீத காயத்துடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் பணியாற்றிய சக கேங்மேன்கள் உள்ளிட்ட பலர் சண்முகசுந்தரத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, தொடர்ந்து கேங்மேன்களை அடிமைகளை போல நடத்துகிறார். எங்களுடைய பணியை அங்கீகரிக்காமல் மிகவும் மோசமாக நடத்துகிறார். நாங்கள் பி.இ. டிப்ளமோ, ஐடிஐ படித்துவிட்டு இந்த பணிக்கு வருகிறோம். எங்களுக்கு நியமிக்கப்பட்ட பணியில் பெரும்பாலும் எங்களை பணியாற்றவிடுவதில்லை. இவர்களை போன்ற உயர் அதிகாரிகள் சொல்லும் இடத்தில் தான் நாங்கள் பணியாற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறோம். அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து எஸ்.இ. பிரகாசிடம் பேசியபோது, “நான் நேரில் சென்று பார்வையிட்டு வந்தேன். அதில் 100 கனெக்சன்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு மட்டுமே மடக்கிவிடப்பட்டுள்ளது. மற்றவை மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும்போதே தான் பணியாற்றி உள்ளனர். தவறு முழுவதும் சண்முகசுந்தரத்தின் மீது உள்ளது. சென்னை வரை தகவல் கொடுக்கப்பட்டு அவருக்கும், மற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரை மெமோ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

ஏற்கனவே இந்த அதிகாரி மீது லட்ச கணக்கில் லஞ்சம் வாங்குவதாக பல புகார்கள் இருந்து வரும் நிலையில், இந்த அதிகாரி மீது துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துவரும் நிலை உருவாகி உள்ளது. தற்போது தன்னுடைய அதிகாரத்தை கொண்டு ஒரு கேங்மேன் வாழ்க்கை பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த அதிகாரி மீது இப்போதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்று ராஜீவ்காந்தியுடன் பணியாற்றி வருபவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.