Advertisment

“தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வியை தட்டிப்பறிக்க நீட் தேர்வைப் பயன்படுத்தி மத்திய அரசு குழப்பம் விளைவிக்கிறது”- மு.க. ஸ்டாலின்

தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வியை தட்டிப்பறிக்க நீட் தேர்வைப் பயன்படுத்தி மத்திய அரசு குழப்பம் விளைவிக்கிறது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டயுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட ‘ஆயுஷ்’ கோர்ஸ்களுக்கும் இந்தாண்டு முதல் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று, மாநில உரிமைகளின் மீது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் பாஜக மத்திய அரசு அறிவித்து, அதை அடிமைச் சேவகம் செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் மாண்புமிகு ஸ்ரீபாத் யேசு நாயக், மாநில அரசு ஏற்றுக் கொண்டிருப்பதைப் பற்றிப் பேசியிருக்கிறார். எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவக் கல்விகளில் “நீட்” நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றமே ஒருமனதாக மசோதா நிறைவேற்றி, அதை குடியரசு தவைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தும், அதிமுக அரசு இரட்டைவேடம் போட்டு இப்படி ஒப்புதல் வழங்கியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

neet kills TN students medical dream says MK Stalin

தமிழ்நாடு சட்டப்பேரவையின் உணர்வை துளியும் மதிக்காமல், மாநில உரிமைகளை பறிக்கும் மமதையான அதிகாரப்போக்குடன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் இப்படி பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இங்குள்ள குட்கா ஊழல் அமைச்சரும், அவருக்குக் குடைபிடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சரும் மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து குறித்து இதுவரை பதில் ஏதும் கூறாமல் இருப்பது, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் பற்றி அதிமுக அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலக் கனவினை தகர்த்துள்ள மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதில், பல்வேறு குழப்பங்களை போட்டிப் போட்டுக் கொண்டு விளைவித்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி வஞ்சித்தது. இதை எதிர்த்து, “எங்களுக்கு தமிழ்நாட்டிற்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும்”, என்று தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய பா.ஜ.க. அரசு, “மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களுக்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் மட்டும்தான் அப்படி செய்யவில்லை. தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை கண்டறிய எங்களுக்கு நேரமில்லை. அதனால் வெளிமாநிலங்களில் ஒதுக்கினோம்”, என்று அலட்சியமான -பொறுப்பற்ற பதிலை தெரிவித்து இருப்பதிலிருந்தே, தமிழ்நாட்டு மாணவர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய பா.ஜ.க., அரசு நடந்து கொண்டு வருவது புலனாகியிருக்கிறது.

சொந்த மாநிலத்தில் தேர்வு எழுதுவதற்கே உயர்நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாட்டு மாணவர்கள் தள்ளப்பட்டதுடன், மே 6 ஆம் தேதி தேர்வு நடைபெறுகின்ற நிலையில், வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டில் தேர்வெழுத வேண்டிய புதிய தேர்வு மையங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை அனுப்பப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில், நான்கு மாநிலங்கள் தொடர்புடைய காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், “அதை மத்திய அரசு தன்னிச்சையாக நிறைவேற்ற முடியாது”, என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் பேட்டியளித்திருக்கிறார்.

அப்படியென்றால் மாநில உரிமைகளைப் பறித்து, லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் மருத்துவக் கல்வி விவகாரத்தில் மட்டும், அள்ளித் தெளித்த கோலத்தில் நீட் தேர்வை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க., அரசு உடனடியாக ஏன் அமல்படுத்தியது? தமிழ்நாடு சட்டமன்றமே, “எங்கள் மாநிலத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளியுங்கள்”, என்று மசோதா நிறைவேற்றி, அதனை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கும் நிலையில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவதோடு, இந்த ஆண்டு முதல் ஆயுர்வேதம் மற்றும் சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் கட்டாயமாக்கியது ஏன்?

தமிழகத்தில் உள்ள கிராமப்புற மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சமூகநீதியை தட்டிப்பறிக்கவுமே நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, இவ்வளவு குழப்பங்களை மத்திய பா.ஜ.க., அரசு செய்து கொண்டிருக்கிறது என்பது “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பது போல் அப்பட்டமாகத் தெரிகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரப் போக்காலும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசின் மெத்தனத்தாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் சொல்லொனாத் துயரத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

ஆகவே, மே 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் “நீட்” தேர்வில், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பங்களை உடனடியாக சரி செய்து, உரிய தேர்வு மையங்களை மாநிலத்திற்குள்ளேயே ஒதுக்கி, சட்டத்தை மீறிய கெடுபிடிகள் ஏதுமின்றி முறையாக தேர்வு நடைபெறுவதற்கு மத்திய பா.ஜ.க., அரசு அவசர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ‘ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட ஆயுஷ் கோர்ஸ்களுக்கும் 2018-19 கல்வியாண்டு முதல் “நீட்” தேர்வு கட்டாயம்’, என்ற முடிவினை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு ஒருவேளை அதற்கு திரைமறைவில் ஒப்புதல் அளித்திருந்தால், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவினை மதித்து, உடனடியாக தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

mk stalin neet
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe