Advertisment

“நீட் கருணை மதிப்பெண் ஒரு மோசடி...” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

publive-image

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (13.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு முகமை (NTA - என்.டி.ஏ.) சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

அதில், “நேர இழப்பை ஈடுகட்ட கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) பெற்ற 1,563 பேரின் முடிவுகளை மதிப்பாய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் அட்டைகளை ரத்து செய்ய குழு முடிவு எடுத்துள்ளது. 1,563 மாணவர்களுக்கான மறுதேர்வு குறித்த விவரம் இன்றே அறிவிக்கப்படும். அந்த தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடத்தப்படும். இதற்கான முடிவுகள் ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும். ஜூலையில் கவுன்சிலிங் தொடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, “நீட் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் “நீட் கவுன்சிலிங் தொடரும். நாங்கள் அதை நிறுத்த மாட்டோம். தேர்வு முடிந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதனால் பயப்பட ஒன்றுமில்லை” எனத் தெரிவித்தது.

Advertisment

publive-image

இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது நீட் தேர்வு குறித்து பேசுகையில், “நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தாண்டு அதாவது 2024 ஆம் ஆண்டில் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அந்த வகையில் நீட் தேர்வில் 67 பேர் முழு மதிப்பெண் பெறுவது சாத்தியமில்லாத ஒன்று ஆகும்.

நடப்பாண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. நீட் தேர்வில் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு முறைகேட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைத்திட வேண்டும். நீட் தேர்வுக்கு தாமதமாக வந்தால் தேர்வை எழுத அனுமதிப்பதில்லை. பிறகு எப்படி நேரமின்மை எனக் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது?. நேரப் பற்றாக்குறையால் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

publive-image

கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் இல்லை. ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானா போன்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தான் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தை நாடப்போவதில்லை. மத்திய அரசிடம் தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என்று வலியுறுத்துவோம். நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது ஒரு மோசடி ஆகும். நீட் தேர்வு மூலம் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு என்பது எட்டாக் கனியாக மாறிவிட்டது. நீட் தேர்வை ஒழிக்க மத்திய அரசு நடவடிகை எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது” எனத் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe