ADVERTISEMENT

நீட் மதிப்பெண் சான்றிதழ் முறைகேடு: டாக்டர் பாலச்சந்திரன் மற்றும் மாணவி தீக்‌ஷா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

01:29 PM Jan 27, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீட் மதிப்பெண் சான்றிதழில் முறைகேடு செய்ததன் காரணமாக கைது செய்யப்பட்ட டாக்டர் பாலச்சந்திரன் மற்றும் அவரது மகளான மாணவி தீக்ஷா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியிடங்களை நிரப்புவதற்கான மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த தீக்‌ஷா என்ற மாணவி அளித்த சான்றிதழ்களில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. பரிசோதித்ததில், நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்களே பெற்றிருந்த மாணவி 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவந்ததை அடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் மாணவி தீக்க்ஷாவும், அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் போலியான ஆவணங்களைத் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

சிறையில் உள்ள இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு நடைபெற்று வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஆன்லைன் மூலமே நீட் மதிப்பெண் சான்றிதழ் பெறப்பட்டது. ஒ.எம்.ஆர் நகல் கோரியபோதுதான் இருவேறு நகல் கிடைக்கப்பெற்றது. தவறு ஏதும் செய்யவில்லை. தேர்வு நடத்தும் அதிகாரிகள் வட்டத்தில்தான் குளறுபடி உள்ளது’ என வாதிடப்பட்டது.

மேலும், ‘நான் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். எனக்கு இல்லாவிட்டாலும் எனது மகளுக்காவது ஜாமீன் வழங்க வேண்டும்’ என தந்தை பாலச்சந்திரன் தரப்பில் கோரப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான நகர குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன், ‘இந்த விவகாரத்தில் திட்டமிட்ட மோசடி நடைபெற்றுள்ளது. இது, சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை ஜாமீனில் விடுவித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துவிடும் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது’ என எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘மனுதாரர்கள் சமர்ப்பித்த இரண்டு ஓ.எம்.ஆர். நகல்களில் ஒன்றில்தான் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொன்றில், எந்த விவரங்களும் இல்லை. சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகக் கூட, மனுதாரர்கள் அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். தீக்ஷாவின் தந்தை பாலச்சந்திரன், சாதாரண கூலித்தொழிலாளி அல்ல. மருத்துவர் என்பதால் அவரது மகளுக்கு மருத்துவ இடத்தைப் பெற இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவரது மகளும் உடந்தையாக இருந்தது தெரியவருகிறது.

சம்பந்தப்பட்ட மாணவி 18 வயது நிரம்பியவர் என்பதால், தனக்கு இதனைப் பற்றி எதுவும் தெரியாது என கடந்து செல்ல முடியாது. 12ஆம் வகுப்பில் 56 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ள மாணவி, நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்தார் என்று கூறுவதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் நீண்ட தேடலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு, குறுகிய காலமே சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை ஜாமீனில் விடுவித்தால், சமுதாயத்தில் தவறான எடுத்துக்காட்டாக அமைந்துவிடும்’ என தெரிவித்து, இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT