Skip to main content

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா- காரசார விவாதம்!

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

NEET Exemption Bill Filed in the Legislature- mlas discussions

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று (08/02/2022) காலை 10.00 மணிக்கு சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, நீட் விலக்கு மசோதாவைத் திருப்பியனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். 

 

அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்து உரையாற்றினார். 

 

பின்னர், நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். 

NEET Exemption Bill Filed in the Legislature- mlas discussions

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கூறியதாவது, "சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். சமூக நீதியின் ஆணி வேரில் நீட் தேர்வு என்ற வெந்நீரை மத்திய அரசு ஊற்றுகிறது. சமூக நீதியை நிலைநாட்டும் நீட் விலக்கு மசோதாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது" என்றார். 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி கூறியதாவது, "மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. ஆளுநரின் நடவடிக்கை தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது; ஒரு தலைபட்சமானது. தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆளுநரைத் திரும்பப் பெற தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என வலியுறுத்தினார். 

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி கூறியதாவது, "தங்களது உரிமைக்காக யார் போராடுகிறார்கள் என்பதை தமிழ்ச் சமூகத்தினர் நன்றாக உணர்ந்திருக்கின்றனர். நீட் தேர்வு கூடாது என்பது மட்டுமல்ல; நுழைவுத் தேர்வே கூடாது என்பதே நமது நிலைப்பாடு. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை அதற்கான பயிற்சி மையங்களை வரைமுறைப்படுத்த வேண்டும்" என்றார். 

NEET Exemption Bill Filed in the Legislature- mlas discussions

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கூறுகையில், "குடியரசுத் தலைவருக்கான அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தியுள்ளது ஏற்கத்தக்கத்தல்ல. தமிழக மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆளுநர் நிராகரித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை நிராகரிக்க உச்சநீதிமன்ற வழக்கை உதாரணமாக காட்டியது, பொருத்தமானதல்ல" எனத் தெரிவித்துள்ளார். 

 

அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது, "மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை அ.தி.மு.க. அரசுதான் கொண்டு வந்தது. யாருமே கேட்காத சூழலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உயர்கல்வித்துறையில் நுழைவுத்தேர்வே வேண்டாம் என 2005- ல் அ.தி.மு.க. அரசில் தான் சட்டம் கொண்டு வரப்பட்டது. நுழைவுத்தேர்வு வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க. அனைத்து காலகட்டத்திலும் உறுதியாக உள்ளது. நீட் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான்" என்று குற்றம் சாட்டினார். 

 

அப்போது, குறுக்கிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி, "1984- ல் அ.தி.மு.க. ஆட்சியில் நுழைவுத்தேர்வு வந்தது என்பதை அ.தி.மு.க உறுப்பினரே ஒப்புக் கொண்டுள்ளார்" என்றார். அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நுழைவுத் தேர்வே வேண்டாம் என தி.மு.க. அரசுதான் சட்டம் கொண்டு வந்தது" என்றார். 

NEET Exemption Bill Filed in the Legislature- mlas discussions

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற ஒத்துழைப்பு தாருங்கள். அ.தி.மு.க. அரசின் மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பியனுப்பியதை ஓராண்டு வரை அ.தி.மு.க. மறைத்தது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.   

 

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "நீட் விலக்கு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அ.தி.மு.க. நிலைப்பாடு. நீட் தேர்வு எந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிந்த விஷயம்" என்றார். 

 

இதனால் அவையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அமைச்சரும், அவையின் முனைவருமான துரைமுருகன், "எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது இடையூறு செய்ய வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

நீட் விலக்கு மசோதாவுக்கு அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பா.ம.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்